செய்திகள்

இலங்கை அரசு தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஜெப்ரி பெல்ட்மன்

“இலங்கையின் வடபகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை விடுவிப்பது போன்ற சாத்தியமான விடயங்கள் உள்ளன. இதன் மூலம், அரசாங்கம் வடக்கில் தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என அண்மையில் இலங்கைக்கு பயணத்தை மேற்கொண்டிருந்த ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் ஐ.நா தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க மற்றும் ஒத்துழைப்புக்கான முயற்சிகள் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் தான் நடத்திய பேச்சுக்களின் விபரங்களையும் அவர் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

“இலங்கையின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எல்லா சமூகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கில் உள்ள மக்களின் மனக்குறைகளுக்கு பொறுப்புக்கூறும் தீர்வு அவசியம். இலங்கையின் எல்லா மக்களினதும் கவலைகளுக்குத் தீர்வு காண அது அனுமதிக்கும்.

அத்துடன், 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கூட்டறிக்கைக்கு அமைவாக அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினேன். இலங்கை அரசாங்கம் சில உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதை நான் ஊக்குவிக்கிறேன்.

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை விடுவிப்பது போன்ற சாத்தியமான விடயங்கள் உள்ளன. இதன் மூலம், அரசாங்கம் வடக்கில் தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்த வேண்டும். இலங்கையர்கள் பெரும் துயரத்தை அனுபவித்துள்ளனர். விசாரணை ஆணைக்குழுக்களின் முயற்சிகள் இருந்த போதிலும், பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் மிக நீளமானது.

உள்நாட்டு செயல்முறைகள் அனைத்துலக விதிமுறைகளுக்கு அமைவானதாக இருக்க வேண்டும் என்ற எமது கருத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படுவதாக உறுதிப்படுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கை அரசாங்கம் தனது கடப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால், வார்த்தைகளை விடவும், செய்ய வேண்டியது அதிகமானதாகும். பொறுப்புக்கூறல் தொடர்பாக உள்நாட்டு செயல்முறைகளுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை அளிக்க வேண்டும்.

அங்குள்ள மக்களிடையே இன்னமும் அவநம்பிக்கைகள் உள்ளன. ஆனால், எல்லா பங்காளர்களும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அரசாங்கம் தனது கடப்பாட்டை நிறைவேற்றுமா என்பது குறித்து நாட்டின் வடக்கில், உள்ள மக்களிடையே சந்தேகம் உள்ளது.

ஆனாலும், அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு உண்மையானது என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன். இலங்கைக்குத் தேவைப்பட்டால் தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஐ.நா தயாராக இருக்கிறது” எனவும் அவர் தெரிவித்தார்.