செய்திகள்

இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை சென்னையில் இன்று ஆரம்பம்

தமிழக- இலங்கை மீனவ பிரதிநிதிகள் இடையே சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அடுத்ததாக கொழும்பில்  கடந்த ஆண்டு மே மாதம் 14ஆம்  திகதி 2ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்த 2 கட்ட பேச்சுவார்த்தைகளிலும் ஆக்கபூர்வமான பல கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. என்றாலும் பிரச்சினைக்கு தீர்வு காணும் அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில், இரு நாடுகளின் மீனவ பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளும் 3-வது கட்ட பேச்சு வார்த்தை சென்னையில் இன்று நடைபெறுகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் இந்திய மீனவர்கள் அமைப்பின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.வீரமுத்து தலைமையில் 17 மீனவர்களும், 5 அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர். இவர்களில் 5 மீனவர்கள் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இலங்கை மீனவர்களின் சார்பில் டி.சதாசிவம் தலைமையில் 10 மீனவர் கள் அமைப்பின் பிரதிநிதிகளான எ.ஐஸ்டின் ஜோய்ஸா, ஜெரால்டு, என்.பொன்னம்பலம், பி.செந்தில்நாதன், பிரான் சிஸ், கமீலா பெரைரா, மரியராசா, ராஜசந்திரம், பி.அந்தோணிமுத்து ஆகியோரும், 5 அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு கொண்டு செல்லப்பட்டு செயல்படுத்தப்படும்

பேச்சுவார்த்தையில் பார்வையாளர்களாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், மீன்வளத்துறை செயலாளர் ச.விஜயகுமார், ஆணையர் பியுலா ராஜேஷ், கூடுதல் இயக்குனர் க.ரெங்கராஜூ, புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், புதுச்சேரி மீன்வளத்துறை செயலாளர் தங்கவேலு, இயக்குனர் மேரி சின்னராணி, துணை இயக்குனர் இளையபெருமாள், மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் சுசித்ரா துரை, கடலோர பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் இலங்கைக் கான இந்திய தூதரக உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.