செய்திகள்

இலங்கை இன்னும் முடக்க நிலையில் உள்ளது – ஐந்து மணித்தியாலங்களில் திரும்பிச்சென்ற அமெரிக்க சுற்றுலாப் பயணி

இலங்கைக்கு ஆவலுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க பிரஜையொருவர் இலங்கையில் போக்குவரத்துசேவைகள் இயங்கவில்லை ஹோட்டல்கள் உணவகங்கள் இயங்கவில்லை என்பதை அறிந்த பின்னர் ஐந்து மணித்தியாலத்தில் அதே விமானத்தில் மீண்டும் புறப்பட்டு சென்றதாக சமூக ஊடகததில் தெரிவித்துள்ளார்.சுமார் 7 முதல் 8 நாட்கள் சுற்றுலாவாக இலங்கைக்கு வந்த அவர், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படாததால் 5 மணி நேரத்திற்குள் திரும்பிச் சென்றதாக கூறியிருந்தார்.

போக்குவரத்து அல்லது ஹோட்டல் வசதிகள் இல்லாததால் அவர் கடுமையான சிரமத்திற்கு ஆளானதாகவும் தன்னால் அவரது பயண நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.அத்தோடு நாடு சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்திருக்கும் என்று அதிகாரிகள் கூறினாலும், வசதிகள் இல்லாததால், இலங்கை இன்னும் முடக்க நிலையில் உள்ளது என வீடியோ ஒன்றினை வெளியிட்டு அந்த சுற்றுலாப் பயணி கூறியிருந்தார்.

நான் புகையிரதசேவை உள்ளதா என கேட்டேன் எந்த போக்குவரத்து சேவையும் இல்லை என்பதை அறிந்தேன் புகையிரதங்கள் இல்லை பேருந்துகள் இல்லை, அடிப்படையில் இலங்கை முடக்கல் நிலையிலுள்ளது.ஆனால் உத்தியோகபூர்வமாக இலங்கை திறக்கப்பட்டுள்ளது.ஆகவே நான் இலங்கையில் தொடர்ந்தும் இருக்கப்போகி;ன்றேனா அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்தேன்,துரதிஸ்டவசமாக ஹோட்டல்கள் உணவகங்கள் திறந்திருக்கின்றனவா ஏதாவது போக்குவரத்து சேவைகள் இயங்குகின்றனவா என்பதை அறியமால் நான் முச்சக்கரவண்டியொன்றை ஏற்பாடு செய்து சுற்றிபார்த்த பின்னர் மீண்டும் திரும்பிச்செல்ல தீர்மானித்தேன்.

ஏழாம் திகதி நான் இலங்கை வந்த அதேவிமானத்திலேயே-நான் மீண்டும் இஸ்தான்புல் வந்துள்ளேன்.அங்கு பிரச்சினை உள்ளது ஒன்று நீங்கள் நாட்டை திறக்கவேண்டும் அல்லது நாடு முடக்கப்பட்டுள்ளது என உலகிற்கு தெரியப்படுத்தவேண்டும்,நான் மீண்டும் திரும்பிச்செல்வேன் ஆனால் தற்போது இல்லை- நீங்கள் உங்கள் நடவடிக்கையை சரியான விதத்தில் முன்னெடுத்த பின்னர் நான் திரும்பி செல்வேன்.

இதேவேளை இலங்கைக்கு வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் சிரமத்திற்குள்ளாகி திரும்பிச் சென்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.(15)