செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுவிப்பு!

இலங்கை கடற்படையினரால் கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், நாட்டின் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 174 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் 27 படகுகளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் 02 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் இராமேஸ்வரத்திற்கு சென்ற இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கவனத்திற்கு இந்த விடயத்தை நாட்டுப்படகு மீனவர் சங்கம் கொண்டுசென்றிருந்தது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாருக்கு அறிவித்தமைக்கமைய, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் குறித்த 22 இந்திய மீனவர்களையும் 02 நாட்டுப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் 118 படகுகளையும் மீட்டு, இலங்கை நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர் நம்பு முருகனை விடுவிக்க வேண்டும் என மற்றொரு மீனவர் சங்க தலைவர் பி.ஜேசுராஜா அமைச்சர் சீதாராமனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரியவிடம் வினவிய போது, 22 இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட குறித்த இரு படகுகளும் நாட்டுப்படகு வகையைச் சேர்ந்தவை எனவும் அவை கரைக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அவற்றில் ஒரு படகு சேதமடைந்துள்ளமை அவதானிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த படகின் இயந்திரத்தை சரிசெய்து அவர்களை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கடற்படை தளபதி பணிப்புரை விடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டுப் படகின் இயந்திரக் கோளாறுக்குள்ளானமை வழக்கு தாக்கல் செய்யப்படவேண்டிய விடயம் இல்லை என்பதால், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

இதன் பின்னர் குறித்த மீனவர்கள் நாட்டுப் படகுகளுடன் சர்வதேச கடல்எல்லை வரை அழைத்துச் சென்று விடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

-(3)