செய்திகள்

இலங்கை கடற்பரப்பினுள் ஊடுருவினால் தமிழக மீனவருக்கு தலா 50,000 ரூபா அபராதம்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்ளைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்திருக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதுவர் ஏ. நடராசா, இதற்கமைய இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறுகின்ற மீனவர்களுக்கு தற்போது 50,000 ரூபா தண்டம் விதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் தமிழகத்தின் காரைக்கால் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள துணைத்தூதுவர், இதே போன்று ஏனைய இடங்களிலும் மேற்கொண்டு இதனைக் கட்டுப்படுத்துவதாகவும் வடமராட்சி கிழக்கு மீனவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

கடந்த சில தினங்களிற்கு முன்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதி தொழிலாளர்களைத் தாக்கி அவர்களின் பல இலட்சம் ரூபா மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நீண்ட காலமாக இடம்பெற்றுவருகின்ற இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கோரியிருந்தனர்.

இதற்கமைய நேற்று திங்கட்கிழமை காலை வடமராட்சி கிழக்கு பிரதேச கடற்றொழிலாளர்களுக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதுவர் தலைமையிலான குழுவினருக்கும் சுமார் 45 நிமிடம் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்துகொண்டிருந்தார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கையில்;

அண்மைக்காலமாக இந்தியாவின் தமிழக மீனவர்கள் எமது கடற்பரப்பிற்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதே வேளையில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் கட்டைக்காடு பிரதேசத்தில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்தச் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது.

இவ்வாறான நடவடிக்கைகள் முரண்பாடுகளை ஏற்படுத்துவதாக அமைகின்றன. ஆனால் எந்தவகையிலும் ஈழத் தமிழர்களுக்கும் தமிழக உறவுகளுக்கும் இடையில் இருக்கின்ற உறவுகளைப் பாதிக்கும் வகையிலோ அல்லது முரண்பாடுகளை ஏற்படுத்தவோ நாம் காரணமாக இருக்கமாட்டோம்.

ஈழத் தமிழர்களுக்கு பல உதவிகளையும் பாதுகாப்புகளையும் தமிழக உறவினர்களே வழங்கியிருக்கின்றனர். ஈழத்தமிழர்களும் தமிழக உறவுகளும் குடும்பம் போன்றதான ஒற்றுமையாக ஒட்டுறவாக இருக்கின்றோம். ஆகவே இந்த உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான அத்துமீறல்களைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் கோரியிருக்கின்றோம்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட துணைத் தூதுவர் நடராசா மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசிற்கும்  தெரியப்படுத்தி யிருக்கின்றோம். இதற்கமைய இந்திய அரசும் விசேட  நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. இதனூடாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியுமென்று நம்புகின்றோம் என்றார்.

குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தில் புதியதொரு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவின் கல் எல்லையைத் தாண்டி வேறு கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டால் ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் அறவீடு செய்யப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஏனைய மாவட்டங்களிலும் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலமாக இந்திய மீனவர்களினது அத்துமீறல்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுமென்றும் உறுதியளித்துள்ளதாகவும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.