செய்திகள்

இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க முடியாது!

தமிழக மீனவர்களை இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க 65 நாட்களுக்கு அல்ல, 65 மணி நேரத்துக்கு கூட அனுமதிக்க முடியாது என்று இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையே நீண்டகாலமாக இருந்துவரும் இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று இரு நாட்டு அரசுகளும் முயற்சிகள் மேற்கொண்டன.
இதன் அடிப்படையில் இதுவரை மூன்றுகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இருதரப்பினரும், இது வாழ்வாதார பிரச்சினை. எனவே இதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

தமிழக மீனவர்கள் சார்பில், பாக்கு நீரிணை பகுதியில் இருதரப்பும் நல்லிணக்கத்துடன் மீன் பிடிக்க வேண்டும், படகுகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், கைது செய்யப்படும் மீனவர்களை படகுகளுடன் விரைவாக விடுவிக்க வேண்டும், ஆண்டுக்கு 83 நாட்கள் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேபோல இலங்கை மீனவர்கள் தரப்பிலும், தமிழக மீனவர்கள் கடலில் ஆழமான பகுதி வரை மீன் பிடிக்கக்கூடிய சுருக்குமடி வலையை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லை.

இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இந்திய மீனவர்கள் ஆண்டுக்கு 65 நாட்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஒரு பரிந்துரையை அனுப்பியது.

இதுகுறித்து இலங்கை அமைச்சர் மகிந்த சமரவீரவிடம் கருத்து கேட்டபோது, ‘‘இரு நாட்டு மீனவர் பிரச்சினையை தீர்க்க இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் ஆண்டுக்கு 65 நாட்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் பரிந்துரையை ஏற்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. 65 நாட்களுக்கு அல்ல, 65 மணி நேரத்துக்கு கூட அனுமதிக்க முடியாது’’ என்று தெரிவித்தாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.