செய்திகள்

இலங்கை சனத்தொகையில் 11 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

2014 ஆம்  ஆண்டு புள்ளி விபரத்தின்படிஉலகத்தின்  நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 422 மில்லியனாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால இலங்கையில் நூற்றுக்கு 11 வீதமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உலக சுகாதார தினமானது நேற்று வியாழக்கிழமை அனுட்டிக்கப்பட்டதுடன் அதுகுறித்து கருத்து வெளியிட்ட வைத்தியல் பாலித மஹிபால மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
உலக சுகாதார தினமானது ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி அனுட்டிக்கப்படுவதுடன் 1950, ஆம் ஆண்டிலிருந்து உலக சுகாதாரதினம் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு உலக சுகாதார அமைப்பு தொனிப்பொருளொன்றை அமைப்பது வழக்கமாகும். அந்த வகையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதே இம்முறை சுகாதார தின தொனிப்பொருளாக அமைந்துள்ளது.
நீரிழிவு நாட்டின் பல்வேறு நாடுகளிலும் அதிகரித்துவரும் நோயாக இனங்காணப்பட்டுவருகிறது. 1980ம் ஆண்டு உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 8மில்லியன் என இனங்காணப்பட்டது. இக்கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டுபார்க்கும் போது 2014ஆம் உலகத்தின்  நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 422 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இலங்கையிலும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசாமான அளவு அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக இலங்கையில் நூற்றுக்கு 11 வீதமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை கட்டுப்படுத்துவதற்காகவும், நீரிழிவு நோயினை தடுப்பதற்காகவும் ,பொதுமக்கள் மத்தியில் நீரிழிவு நோய் குறித்த தெளிவினை ஏற்படுத்துவதற்கான பல்வேறு செயற்பாடுகள் இந்த உலக சுகாதார தினத்தில் ஆரம்பிக்கப்படும்
நீரிழிவு நோயை கட்டுபடுத்துவதற்காக மக்கள் சுகாதாரமான உணவுகளை உட்கொள்ளவேண்டும். அத்துடன் தமது உணவு வேளையில் அதிகளவிலான மரக்கறியையும், பழவகையினையும் உள்ளடக்க வேண்டும். சீனி உட்கொள்ளும் அளவினை கட்டுப்படுத்த வேண்டும். அதேவேளை உடல் நிறையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதுடன் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
n10