செய்திகள்

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தால் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு ஊடகவியலாளர்களுக்கு விருதுவழங்கும் விழாவும் கௌரவிப்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கலும் கௌரவிப்பும் ஏனைய ஊடகவியலாளர்களுக்கு ஊக்குவிப்பு உபகரண உதவிகள் வழங்கல் என்பன இடம்பெறவுள்ளதுடன், முருகேஷ் குழுவினரின் இசை நிகழ்வும் (கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள்) நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வு ஊடகவியலாளர் அ.நிக்ஸன் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் பிரதம விருந்தினராக அதிவணக்கத்துக்குரிய பிதா இராயப்பு ஜோசப் (ஆயர் – மன்னார் மறை மாவட்டம்) மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மனோ கணேசன் (ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்), எம்.ஏ.சுமந்திரன் (நாடாளுமன்ற உறுப்பினர்) மற்றும் கௌரவ விருந்தினர்களாக ப.திகாம்பரம் (அமைச்சர்), சீனித்தம்பி யோகேஸ்வரன் (நாடாளுமன்ற உறுப்பினர்) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுவதுடன், சிறப்பு சொற்பொழிவு பேராசியர் சபா.ஜெயராஜா, புதிய ‘ஊடகங்களின் வருகையும் பாரம்பரிய ஊடகங்களின் நிலையும்’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கேட்டுள்ளது.

SLTMA