செய்திகள்

இலங்கை தொடர்பில் ஐ. நா மனித உரிமைகள் சபை நீதிமன்றஞ் சார்ந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்: அனுராதா மிட்டால்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நீதிமன்றஞ் சார்ந்த நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று ஒக்லாண்ட் ஆய்வு நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளரும் நேற்று கலிபோர்னியாவில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பிலான ” யுத்தத்தின் நீண்ட நிழல் ” எனும் ஆய்வு அறிக்கையை தயாரித்தவருமான அனுராதா மிட்டால் வலியுறுத்தி இருக்கிறார்.

நேற்று வியாழக்கிழமை ” யுத்தத்தின் நீண்ட நிழல் ” என்ற அறிக்கை வெளியிட்டுவைக்கப்பட்ட நிகழ்வை ஒட்டிய ஊடகவியலாளர் மாநாட்டில் தொடக்க உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் அரசாங்கங்களின் கடந்த கால நடவடிக்கைகளின் அடிப்படையில் எந்த ஒரு தீர்க்கமான நடவடிக்கைக்கும் சர்வதேச அழுத்தம் அவசியமானது என்றும் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய நாடுகள் தமது பூகோள நலன்களை மையப்படுத்தி செயற்படாமல் இலங்கை தொடர்பிலான ஐ. நா விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜகத் டயசை இராணுவ உயர் பதவிக்கு நியமித்தமை அரசாங்கத்தின் நம்பகத் தன்மையான போர்க்குற்ற விசாரணை உறுதிப்பாடுகளை சந்தேகத்துக்குட்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.