செய்திகள்

இலங்கை தொடர்பில் மற்றொரு பிரேரணை: ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பிக்கும்?

ஜெனீவாவில் அடுத்த நடைபெறவிருக்கும் ஐ..நா. மனித உரிமைகைள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த மற்றொரு பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் இராஜாங்க விஜயத்தை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை கொழும்பு வரவுள்ள தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இது தொடர்பாகவும் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் போது ஆராய்வார் எனவும் தெரியவந்திருக்கின்றது.

2013, 2014 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளின் அடுத்த கட்டமாகவே இந்தப் பிரேரணை அமைந்திருக்கும் எனவும், உள்நாட்டுப் பிரச்சினை மீண்டும் உருவாகாமல் இருப்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா விரும்புவதாகவும் தெரியவந்திருக்கின்றது. அதனை வலியுறுத்தும் வகையிலேயே புதிய பிரேரணை அமைந்திருக்கும்.

நாளை இலங்கை வரும் நிஷா பிஸ்வால் இது தொடர்பான பணிகளைத் இறுதிப்படுத்துவர் எனவும், கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் முக்கிய அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இனநெருக்கடியோ, உள்நாட்டுப் போரோ தலைதூக்காத வகையிலான அரசியலமைப்பு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உறுதிப்பாட்டை இலங்கை வழங்க வேண்டும் என்பதை அமெரிக்கா எதிர்பார்ப்பதாகத் தெரியவந்திருக்கின்றது. அமெரிக்கா முன்வைக்கப்போகும் புதிய பிரேரணை இதனை அடிப்படையாகக் கொண்டதாக அமையும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கை வரும் அமெரிக்காவின் உயர் மட்ட தலைவரான நிஷா பிஸ்வால் கொழும்பில் தங்கியிருக்கும் போது, அரசாங்க உயர்மட்டப் பிரமுகர்களை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். மத மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரமுகர்களையும் அவர் சந்திக்கின்றார்.

போருக்குப் பிந்திய நல்லிணக்கம், மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பாக கொழும்பில், ஆரம்பக் கட்டப் பேச்சுக்களை நடத்திய பின்னர், அவர், வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாணசபையின்  உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார். பெப்ரவரி 3 ஆம் திகதி அவர் பிரித்தானியா செல்வார்.