செய்திகள்

இலங்கை போர்க் குற்ற அறிக்கை ஆகஸ்டில் வெளிவரும்?

இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நடத்திய விசாரணை அறிக்கை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படலாம் எனத் தெரிய வந்திருக்கின்றது. தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர் செஸித் அல் குஸேனும் இது தொடர்பாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

செப்டெம்பரில் நடைபெறும் 30ஆவது கூட்டத் தொடரிலேயே அறிக்கை வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஆகஸ்ட் 15இற்குப் பின்னர் எப்போதும் இந்த அறிக்கை வெளியிடப்படலாம் என ஆணையாளர் தெரிவித்திருக்கின்றார். அறிக்கை முன்கூட்டியே வெளியிடப்படும் நிலையில், செப்டெம்பர் மாதத்தில் அது குறித்த விவாதம் பேரவையில் இடம்பெறும்.

மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற பக்க நிகழ்வு ஒன்றில் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே, மனித உரிமைகள் ஆணையாளர் இந்தத் தகவலைத் தெரிவித்திருந்தார்.

தற்போது ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலேயே இந்த அறிக்கை வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், புதிதாகப் பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் கேட்டுக்கொண்டதையடுத்தே அறிக்கை வெளியிடப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. ஏப்ரலில் பாராளுமன்றத்தைக் கலைத்து ஜூனில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிடும் நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்படுவதை மேற்கு நாடுகளும் விரும்பியிருக்கவில்லை.

செப்டெம்பரில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இந்த அறிக்கை வெளியிடப்படும் என ஆணையாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இருந்தபோதிலும், இதனை முன்கூட்டியே வெளியிடுவது தொடர்பாக ஆணையாளர் இப்போது திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது.