செய்திகள்

இலங்கை மீன்களுக்கான ஐரோப்பாவின் தடை நடைமுறைக்கு வந்தது

இலங்கையிலிருந்து ஐரோப்பிய சந்தைக்கு மீன் இறக்குமதி செய்வதற்கு உள்ள தடை  நேற்று முன்தினம் முதல் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக விடுக்கப்பட்டு வந்த எச்சரிக்கையின் தொடர்ச்சியாகவே இலங்கைக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல், கடல் விவகாரம் மற்றும் மீன்வளத்துறை தொடர்பான பேச்சாளர் என்ரிகோ பிரீவியோ கூறினார்.

“சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பிலும் போதுமான கண்காணிப்பு நடவடிக்கைள் இல்லாமை பற்றியும் சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைவாக இலங்கை நடக்கவில்லை என்ற காரணத்திற்கா 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை எச்சரிக்கப்பட்டது” என்றார் என்ரிகோ பிரீவியோ. ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்குள் மீன் ஏற்றுமதி செய்கின்ற பிரதான நாடுகளில் இலங்கையும் ஒன்று.

குறிப்பாக, டூனா எனப்படுகின்ற சூரை வகை மீன்களும் வாளைமீன் வகைகளும் இலங்கையிலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகின்றன. 2013-ம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புநாடுகள் இலங்கையிலிருந்து 7,400 தொன்கள் அளவுக்கு மீன் இறக்குமதி செய்துள்ளன.

அதாவது, 74 மில்லியன் யூரோ அளவுக்கு இலங்கையிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைக்குள் மீன் இறக்குமதி நடந்துள்ளது.

குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளே இலங்கையிலிருந்து மீன் இறக்குமதி செய்கின்ற முக்கிய நாடுகள்.

இலங்கை மீதான இந்தத் தடை இந்த ஆண்டு ஜனவரி நடுப்பகுதியில் நடைமுறைக்கு வருகின்றமை குறித்து கடந்த ஆண்டு அக்டோபரிலேயே ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்திருந்தது.

ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ள சீர்திருத்தங்களை நிறைவேற்ற இன்னும் சில மாதங்கள் தேவைப்படுவதாக இலங்கையின் மீன்பிடித்துறை மற்றும் நீர் வளத் துறையின் தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியாராச்சி தமிழோசையிடம் கூறினார்.

‘குறைந்தது 1000 படகுகளுக்கு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தபட வேண்டும் என்று எம்மிடம் கோரப்பட்டுள்ளது. இந்தக் கருவிகளை பொருத்துவதற்கு தற்போது எம்மிடம் இணங்கியுள்ள நிறுவனத்திற்கு 2015 ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் தேவைப்படுகின்றது’ என்றார் நிமல் ஹெட்டியாராச்சி.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக நாட்டின் மீன்பிடித்துறை தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஐரோப்பிய சந்தையை இழப்பதால் இலங்கை நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

‘இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் 34 வீதம் ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 38 வீதம் ஜப்பானுக்குத் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனினும் மாற்று சந்தைகளை நாங்கள் தேடியிருக்கின்றோம்’ என்றும் கூறினார் ஹெட்டியாராச்சி.

‘ரஷ்யா போன்ற நாடுகளுடன் இதற்காக பேச்சுநடத்தி மாற்றுவழியொன்றை கண்டுபிடித்திருக்கிறோம். எனினும் ஐரோப்பிய சந்தையை பாதுகாப்பதற்கான முயற்சிகளை நாங்கள் கைவிடவில்லை’ என்றார் இலங்கையின் மீன்பிடித்துறையின் தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியாராச்சி.