இலங்கை வந்தார் கமலேஷ் சர்மா: பொதுநலவாய தலைமையை ஏற்க மைத்திரிக்கு அழைப்பு
மூன்றுநாள் உத்தியோக விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா பொதுநலவாய அமைப்பின் நடப்பாண்டின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதுடன், அடுத்த கூட்டத்துக்கு தலைமை பொறுப்பேற்க அழைப்பு விடுக்கவுள்ளார்.
நேற்று இலங்கைக்கு வந்த கமலேஷ் சர்மா இவ்வாண்டின் நவம்பர் மாதம் மால்டாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பார். அது தொடர்பான கலந்துரையாடல் மைத்திரியுடன் நடைபெறுவதுடன் இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டுக்கு பின்னர் இலங்கையின் தேசிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயவுள்ளார்.
மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் இம்மூன்றுநாள் விஜயத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் 2013 நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடந்தமை குறிப்பிடத்தக்கது.