செய்திகள்

இலங்கை வரும் மோடியிடம் வடக்கில் மேலும் 30 ஆயிரம் வீடுகளை கோரத் திட்டம்!

கடந்த காலத்தில் இந்திய அரசு வழங்கிய வீட்டுத்திட்டம் வடக்கு மக்களுக்கு பேருதவியாகியது. எனினும் இன்னும் பலர் வீடற்றவர்களாகவே இருக்கின்றனர். கிட்டத்தட்ட 30 ஆயிரம் வீடுகளாவது தேவையாகவுள்ளது. எனவே இந்தியப் பிரதமர் இலங்கை வரும்போது அவரிடம் இந்த உதவியைக் கோருவோம் என வடக்கு மாகாண கடற்றொழில் போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மன்னாருக்கும் வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னாருக்கு இந்தியப்பிரதமர் வரும்போது, தமிழ்மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து விரிவான மனு ஒன்றை நான் கையளிப்பேன். குறிப்பாக எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் தொடர்பான விடயங்களையும் அவருக்கு சுட்டிக்காட்டவுள்ளேன்.

அத்துடன் இந்திய அரசினால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்துக்கு நன்றி தெரிவிப்பதுடன் மேலும் முப்பது ஆயிரம் வீடுகள் எமது வடமாகாணத்திற்கு தேவைப்படுகிறது. ஆகவே இது தொடர்பாகவும் எனது கோரிக்கையை முன்வைக்க இருக்கிறேன்.

இலங்கை இந்திய நாடுகளுக்கிடையில் சுமுகமான உறவு வளரவேண்டும், அதேவேளை எமது கடல்வளத்தை அழிய விட முடியாது. எனவே அதற்கான பொறிமுறை ஒன்று நடைமுறைபடுத்தப்படும். இதற்கு வட மாகாண மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.