செய்திகள்

இலங்கை விவகாரம் குறித்து பாராளுமன்ற விவாதம் வேண்டும்: தமிழகக் கட்சிகள் வலியுறுத்து

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து இந்தியப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று திங்கள்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழக அரசியல் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளில் இலங்கை விவகாரம் முக்கியமானதாக இருந்தது.

இக்கூட்டத்தில் அதிமுக சார்பில், திருவள்ளுர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.வேணுகோபால், மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பங்கேற்றனர்.

அப்போது அதிமுக சார்பில், “முதல்வராக ஜெயலலிதா இருந்த போது தமிழகத்துக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். நதிநீர் இணைப்புத் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை காக்கவும், இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா கூறுகையில், “மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்பாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறுகையில், “மத்திய அரசு கொண்டு வரும் 6 அவசர சட்ட மசோதாக்களில் நிலம் கையகப்படுத்துதல், காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இலங்கைக்கு பிரதமர் மோடி செல்ல உள்ள நிலையில் அங்கு நிலவும் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய அழுத்தத்தை மத்திய அரசு தர வேண்டும். இச்சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி கருத்துகளை கேட்க வேண்டும் எனத் தெரிவித்தார்.