செய்திகள்

இழப்புகளுக்கும், தடைகளுக்கும் கூட்டமைப்பே பொறுப்புக் கூற வேண்டும்: டக்ளஸ் சாடுகிறார்

கடந்த காலங்களில் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்காலங்களிலும் எதையும் பெற்றுக் கொடுக்க மாட்டார்கள் என்பதுடன் இருக்கிறதை இல்லாமல் செய்வதும் பலவீனப்படுத்துவதுமே அவர்களின் சுயலாப அரசியல் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையலுவலகத்தில் இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நீடித்த ஆட்சியில் தான் எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமென்பதுடன் யார் ஆட்சிக்கு வருகின்றார்களோ அவர்களுடன் பேசுவதன் ஊடாகவே பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வினை காணமுடியுமென்பதே எமது நிலைப்பாடாகும்.

எமது இந்த நிலைப்பாட்டுக்கு மாறாக கூட்டமைப்பினர் ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமென்று கூறிவந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னைய அரசுடனான இணக்க அரசியல் ஊடாகவும் புரிந்துணர்வின் ஊடாகவும் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை எம்மால் முன்னெடுக்க முடிந்துள்ளது என்றும் எதிர்ப்பரசியலை முன்னெடுத்த கூட்டமைப்பினரால் கடந்தகாலங்களில் எதையும் சாதிக்க முடியாமல் இருந்ததைப் போலவே இன்றும் அதேநிலையே தொடர்கிறது.

அத்துடன், கடந்த காலங்களில் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்காத கூட்டமைப்பினர் நிகழ்காலத்திலும் எதிர்காலங்களிலும் எதனையும் பெற்றுக் கொடுக்க போவதில்லையெனவும் இருக்கிறதை இல்லாமல் செய்யும் கைங்கரியங்களிலும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளிலுமே முனைப்புடன் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே இனப்படுகொலை தொடர்பாக வடமாகாண சபையினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் சாதக, பாதகங்கள் மற்றும் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டு விரிவாக ஆராயப்பட்டது.

இந்நிலையில் மாற்றுத் தலைமை மற்றும் மாற்றுக் கட்சியென்ற வகையில் ஏற்படுத்தக் கூடியதும் வலுப்படுத்தக் கூடியதுமான மாற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், வடக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியதன் பின்னர் அவர்களால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் இதுவரை நிறைவேற்றப்பட்டதும் நிறைவேற்றப்பட வேண்டியவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில் இவ்வாறான கடந்த நிகழ்கால அனுபவங்களை கருத்தில் கொண்டு மக்களுக்கு உண்மையானதும் யதார்த்தமானதுமான கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டியதும் மக்களுக்கான சேவைகளை அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் முன்னெடுப்பதற்கு பொறுப்புகளை உணர்ந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

3

4