செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் வாக்களிப்புகள் ஆரம்பம்

_81692337_026340361-1

பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கவுள்ள இஸ்ரேல் தேர்தலில் இன்று வாக்களிப்புகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த தேர்தலில் பிரதமரின் லிகுயிட் கட்சிக்கும்,சியோனிஸ் யூனியன் கூட்டமைப்பிற்கும் இடையில் கடும் போட்டி இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட சியோனிஸ்ட் கூட்டமைப்பு பாலஸ்தீனியர்களுடனும்,சர்வதேச சமூகத்துடனனும் நல்லுறவை ஏற்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.இதேவேளை தான் நான்காவது தடவையாக தெரிவுசெய்யப்பட்டால் பாலஸ்தீன தேசத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு முடிவு கட்டுவேன் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் நீண்ட கால கரடுமுரடான அரசியல் வாழ்க்கையில் மிகவும் தீர்க்கரமான, காலமாக இந்த வாரம் அமையப்போகின்றது.

அவரது ஆதரவாளர்களால் சர்வதே அரசியல் மேதை என வர்ணிக்கப்படுவரும், இஸ்ரேலிய பத்திரிகைகளால் முன்னாள் தளபாட கடை விற்பனையாளன் என குறிப்பிடப்படுபவருமான நெட்டன்யாகுவிற்கு விரைவில் தான் தொடர்ந்தும் இஸ்ரேலிய பிரதமராக பதவி வகிப்பாரா என்பது தெரியவந்துவிடும்.
தனது கூட்டணி அரசாங்கம் சிறப்பாக செயற்படவில்லை என கருதியதை தொடாந்து நெட்டன்யாகுவே இரண்டு வருடங்களுக்குள் புதிய தேர்தலொன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.கூடிய விரைவில் மீண்டும் ஆட்சிக்கு வருவதே அவரது நோக்கம்.
எனினும் அவர் எதிர்பார்த்தது நடைபெறாது என்பதை கருத்துக்கணிப்புகள் புலப்படுத்தியுள்ளன.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சிப்பி லிவினி மற்றும் தொழிற்கட்சி ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள சியோனிஸ்ட் கூட்டணியே வெற்றிபெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை லிகுயிட் கட்சி அதிக ஆசனங்களை கைப்பற்றாவிட்டாலும், நெட்டன்யாகு கூட்டணி அரசையமைக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இஸ்ரேலின் தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறாததும் கூட்டணி அரசாங்கங்களே நாட்டை இதுவரை ஆண்டுவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரச்சாரங்களில் சர்வதேச விவகாரங்களே முக்கியம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.ஈரானின் அணுவாயுத திட்டம், அமெரிக்காவுடனான உறவுகள் போன்ற விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன.அதேவேளை இஸ்ரேலில் வாழ்க்கைசெலவு அதிகரிப்பது குறித்தும் பலவேட்பாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
ஜெருசலேம் நகரின் எதிர்காலமும் முக்கிய விடயமாக தேர்தல் பிரச்சாரங்களில் இடம்பெற்றிருந்தது.
தன்னால் மாத்திரமே நகரின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியுமென தெரிவித்துள்ள நெட்டன்யாகு,தான் பிரதமராக இருக்கும் வரை பாலஸ்தீன தேசமொன்று உருவாகாது என குறிப்பிட்டுள்ளார்.