செய்திகள்

ஈடன் கார்டனில் கெயில் மழை

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கிறிஸ் கெயில் 56 பந்துகளில் 96 ரன்கள் விளாச, பெங்களூர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவைத் தோற்கடித்தது.

கொல்கத்தா ஈடன் கார்டனில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஜோடியான ராபின் உத்தப்பா, கேப்டன் கௌதம் கம்பீர் இருவரும், முதல் ஓவரிலேயே 13 ரன்கள் விளாசி நிலையான அடித்தளம் அமைத்தனர். விக்கெட் விழாமல் ரன்குவிப்பில் கவனம் செலுத்திய இந்த ஜோடியை முதல் 10 ஓவர்கள் வரை பிரிக்க முடியவில்லை. 11-ஆவது ஓவரில் அபு அகமது வீசிய பந்தில் அந்த முயற்சிக்கு பலன் கிடைத்தது.

உத்தப்பா (35 ரன்கள்) அடித்த பந்தை டேரன் சமி கேட்ச் செய்தார். அடுத்து மணீஷ் பாண்டே உடன் ஜோடி சேர்ந்த கம்பீர் ஐபிஎல் தொடரில் தனது 25-ஆவது அரை சதத்தை நிறைவு செய்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே கம்பீர் 58 ரன்களுடன் (46 பந்து) மன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆட முயன்ற சூரிய குமார் 11 ரன்கள் எடுத்திருந்தபோது, சிக்ஸர் அடிக்க முயன்றபோது மன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்த பந்திலேயே மணீஷ் பாண்டேவும் (23 ரன்கள்) ரன் அவுட்டானார்.

ரசெல் அதிரடி: யூசுஃப் பதான் (3 ரன்கள்) வந்த வேகத்தில் திரும்பினார். கடைசி கட்டத்தில் ஆண்ட்ரூ ரசெல் பெங்களூரு பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அதிரடியாக ஆடிய ரசெல் 17 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 41 ரன்கள் விளாச, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது.

178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விராட் கோலியும், கிறிஸ் கெய்லும் பெங்களூரு அணியின் இன்னிங்ûஸ தொடங்கினர். 15 பந்துகளை மட்டுமே சந்தித்த கோலி ஒரு சிக்ஸர் விளாசிய திருப்தியுடன் 13 ரன்களுடன் நடையை கட்டினார். தினேஷ் கார்த்திக், மன்தீப் சிங் ஆகியோர் தலா 6 ரன்களுடன் யூசுஃப் பதனானின் ஓவரில் போல்டாகினர்.

மறுபுறம் சிக்ஸர், பவுண்டரி என தனது பணியைத் தொடர்ந்த கிறிஸ் கெயிலுடன் தென் ஆப்பிரிக்க சூறாவளி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் இணைந்தார். கரியப்பா வீசிய 11-ஆவது ஓவரில் மட்டும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 15 ரன்கள் விளாசிய டி வில்லியர்ஸ் அந்த ஓவரின் கடைசி பந்தில் இறங்கி அடிக்க முயன்று “ஸ்டம்பிங்’ ஆனார்.

16 ரன்களை கரியப்பா விட்டுக் கொடுத்தாலும் டிவில்லியர்ஸ் (28 ரன்கள், 4 பவுண்டரி, 2 சிக்ஸர்) விக்கெட்டை வீழ்த்தி ஆறுதல் அடைந்தார்.

நம்பிக்கையளித்த கெயில்: எதிர்பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஆடிய கெயில் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன் பின்னர் பந்துகள் குறைவாக இருப்பதை உணர்ந்த கெயில் வேகத்தை கூட்டினார். யூசுஃப் பதான் வீசிய 12, 16-ஆவது ஓவர்களின் கடைசி பந்தில் கெயில் கொடுத்த இரண்டு வாய்ப்புகளை கொல்கத்தா அணியினர் கோட்டைவிட்டனர். இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட அவர் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.

கடைசி இரண்டு ஓவர் மீதம் இருக்க பெங்களூரு அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.

கெயிலும், ஹர்ஷல் படேலும் களத்தில் இருந்தனர். 19-ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார் கெயில். தனது சதத்தை அவர் நிறைவு செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இரண்டாவது பந்தில் மறுபடியும் தூக்கி அடித்தார்.

அதனை சிக்ஸர் எல்லையில் அபாரமாக ஃபீல்டிங் செய்து தடுத்த மணீஷ் பாண்டே பந்தை கீப்பர் உத்தப்பாவை நோக்கி வேகமாக வீசினார். இதில் இரண்டு ரன்கள் எடுக்க முயன்ற கெயில் ரன் அவுட்டானார். அவர் 56 பந்துகளில் 96 ரன்கள் (7 பவுண்டரி, 7 சிக்ஸர்) எடுத்து வெளியேறினார். அதன் பின்னர் தேவைப்பட்ட 8 ரன்களை அகமதுவும், பட்டேலும் எளிதாக எடுத்தனர்.

இதனால் 18.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.