செய்திகள்

ஈராக் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 8 பேர் பலி

ஈராக்கில் ஷியா மசூதியில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினரை குறிவைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஷியா பிரிவினர் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்குப் பின்னர் மசூதியில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான்.
இதில், 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானதாகவும், 31 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் ஐ.எஸ். அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஈராக்கில் ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய பகுதிகளை பாதுகாப்பு படையினர் மீட்டபோதிலும், மேற்கில் உள்ள பெரும்பாலான பகுதி இன்னமும் மீட்கப்படவில்லை. அங்கிருந்தபடி அரசு வசம் உள்ள பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பு தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.