செய்திகள்

ஈழத்திலே பெண்களின் படைப்புக்கள் குறைவாக இருப்பதற்கு காரணங்கள் என்ன?

தொகுப்பு: வேலணையூர் தாஸ்

“ஈழத்திலே பெண்களின் படைப்புவெளி குறுகி இருக்கின்றது” என்பது ஊடகங்களிலும், கருத்தரங்குகளிலும் மற்றும் கூட்டங்களிலும் இன்று பொதுவாக முன்வைக்கப்படுகின்ற ஒரு கருத்தாக இருக்கிறது. இதற்கு பல்வேறு சமூக மற்றும் கலாசார ரீதியான காரணங்கள் இருக்க முடியும். படைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இந்த விடயத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் எத்தகைய காரணங்களை முன்வைக்கிறார்கள் என்று சிலரை அணுகி அவர்களின் கருத்துக்களை கேட்டபோது வாசிப்பு பழக்கம் குறைவாக இருப்பது முதல் பெண்களின் படைப்புக்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை என்று பல கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

maalini maalaaஅரியாலை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாலினி தற்போது இடம்பெயர்ந்து யேர்மனியில் வசித்து வருகின்றார். இணையத்தில் அதிகமாக எழுதும் மாலினி, “வாசிப்புப் பழக்கம் இன்மை” பெண்களின் படைப்புக்கள் குறைவாக இருக்கின்றமைக்கான காரணங்களில் ஒன்று என்று சொல்கிறார்.

“அதிகம் வாசிப்பவர்களுக்குத் தான் அடிப்படையில் எழுதத் தோன்றும். பொதுவாக வாசிப்புத்தன்மை எம் மக்கள் மத்தியில் குறைந்திருக்கிறது. வாசித்தலை விட தொலைக்காட்சியில் நேரம் போக்குவது அதிகமாக இருக்கிறது. சிந்தனை மழுங்கடிப்புக்கும் சீரிய கருத்துக்கள் மனதில் எழாமைக்கும் இது முக்கிய காரணமாக அமையலாம். வாசிப்பற்ற சூழலில் எழுதும் ஆர்வம் இயல்பாகப் பின்தங்கி விடுகிறது. மற்றும் ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது பிரச்சனை மனதை அழுந்தத் தாக்கினால் அதை ஏதோ ஒரு வழியில் வெளியிற் கொண்டுவரத் தோன்றும். பொதுவாக அவர்கள் பிரச்சனைகளை மிக இயல்பாக எடுப்பதும் கூடி உரையாடிவிட்டுக் கலைவதுமாக இருப்பதற்குரிய நட்பு அல்லது உறவு மனிதர்கள் உள்ள வசதி இருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள தனிமைச் சூழல் ஏற்படுத்தும் மன அழுத்தம், அதை வெளிப்படுத்தத் தேடும் வடிகாலாய் பெண்களை அதிகம் எழுத வைக்கிறது என்று நினைக்கிறேன். இதனால் அதிக வாசிப்புக்கான கூட்டங்கள் நிகழ்வுகள் போட்டிகள் போன்றவற்றை ஆரம்ப நிலையில் ஊக்குவிகலாம்” என்று கூறுகிறார் மாலினி.

piriyanthiயாழ் பல்கலைக்கழக பட்டதாரி மாணவியும் சிறந்த கவிதைகளை எழுதி வருபவருமான ஒரு படைப்பாளி பிரியந்தி, பெண்ணாக இருந்து  செயற்படுகின்ற போது எழுகின்ற மனச்சிக்கலை இவ்வாறு தெரிவிக்கின்றார்:

“பொதுவெளிக்கு வரும் பெண்களைக் குறிவைத்து முன்வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்களே  அவர்களின் படைப்பூக்க மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி சிந்தனைக்கும் செயலிற்குமிடையே வெற்றிகொள்ள முடியாத ஒரு முரண்வெளியை ஏற்படுத்தி இறுதியில் சுயவெறுப்பிற்கும் அதன் விளைவான செயலறு நிலைக்கும் இட்டுச்செல்கின்றது”.

manutheeranபெண்களின் படைப்புக்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமை பெண்களின் எழுத்துக்கள் ஈழத்தில் குறைந்து வருவதற்கு ஒரு காராணம் என்பது மலேசியாவில் கல்வி கற்ரு வரும் வேலணையூரைச் சேர்ந்த மனுதீரன் என்ற இளங் கவிஞரின் கருத்து.

“பெண்களுக்கு நாம் அங்கீகாரம் வழங்க முன்வருவதில்லை . சில சமூகங்களில் தாங்கள் வெளியிடும் புத்தகத்தின் செலவுகளை வெளியீட்டாளர்களே ஏற்கிறார்கள். அதனால் அங்கு கூடுதலாக பெண்கள் எழுதுகிறார்கள்.

மற்றுமொரு விடயம், பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் மட்டுமே அறியப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கான செயற்பாடு குழுக்கள் மூலம் இடம் பெறுகிறது . ஆனால் பல பெண்கள் வெளியில்தான் இருக்கிறார்கள். அவர்கள் இலகுவில் இனம் காணப்படுவதில்லை. அவர்களிடத்தில் பலரில் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களை விட ஆழுமை அதிகமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் ஒரு குழுவில் தங்களை ஈடுபடுத்துவதில்லை. இவர்களை இனங்காண வாசிகசாலைகளின் மூலமான ஒரு கருத்தாடல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுதல் அவசியம். அவர்களுக்கு ஒரு இயல்பான எண்ண ஓட்டம் இருக்கும். எப்போதும் அதுதான் தேவை, புத்திசாலித்தனமல்ல. பிரசுரங்கள் மூலம் பாடசாலைகளிலும் அதைக் கொண்டு சேர்ப்பது அவசியம். புது புத்தகங்கள் மற்றும் ஆக்கங்கள் வெளியிடும்போது புதிதாக கவிதை மற்றும் இலங்கியங்களில் ஆர்வம் உள்ளவர்களை ஈர்க்க வேண்டும்.என்று சொல்கிறார் மனுதீரன்.

kowthamiயாழ் பல்கலைக்கழக மொழி பெயர்ப்புதுறை மாணவியும் கவிதை துறையில்  ஈடுபடுபவருமான யோ. கௌதமியின் கருத்து இப்படி இருக்கிறது:

“பொதுவாக எழுதி என்ன பயன் என்னும் நிலை வந்துவிட்டது. குறிப்பாக பெண்கள் எழுதாமைக்கு நான்கு காரணங்களை நான் கூறுவேன் 1.குடும்பச் சுமை 2.விமர்சனத்தை எதிர்கொள்வதற்கான தைரியம் இன்மை 3. வாசிப்பு இன்மை 4. சமூகப் பிரக்ஞையற்ற அழகியல் ஈடுபாடு.

யாழ்ப்பாணத்துப் பெண்களில் எழுதுபவர்களில் 3 வகை உண்டு. 1. தேவையை அடிப்படையாகக் கொண்டு எழுதுபவர்கள். உதாரணம்: ஆய்வு, தாம் சார்ந்த துறைகள் பற்றி மதிப்பீடுகளைச் செய்யும் படித்த பெண்கள். இவர்களுடைய எழுத்தானது தேவை முடிந்த பின் முடிவடைந்து விடுகின்றது. 2. தொழில் சார் எழுதுநர்கள் -இவர்கள் படைப்புக்களை முனவைப்பது குறைவு. தரவுகளை எழுத்தில் வழங்குபவர்கள். ஊடகவியலில் ஈடுபடும் பெண்களில் ஒரு சிலர் காத்திரமான எழுத்துக்களை முன் வைத்த சந்தர்ப்பங்கள் உண்டு. 3.சமூகப் பிரக்ஞை உள்ள எழுத்தாளர்கள்- இவ் வகையானவர்கள் மிக மிக அரிது . அவ்வாறு அரிதாக எழுதுகின்றவர்களும் ஒரு கட்டத்துக்கு மேல் எழுத்துலகை விட்டு மறைந்து விடுகின்றனர் . அதற்கு குடும்பச் சுமை, சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக இருக்கலாம். இவ்வாறு குடும்பச் சுமை, சமூகக் கட்டுப்பாடுகள் என்று நாம் கூறினாலும் தற்போது பெண்களின் நாட்டம் அழகியலை அடிப்படையாகக் கொண்டே இருக்கிறது. சமூகப் பிரக்ஞையோடு எழுதவருகின்றவர்களையும் விமர்சனங்களின் மூலம் துரத்தியடிக்கும் ஒரு சூழ்நிலையும் பெண்களை எழுத விடாமல் செய்கின்றது. அத்தோடு பொதுவாகவே சமூகப் பிரக்ஞை என்பது குறைந்ததால் எழுத்தின் மேலுள்ள நாட்டமும் குறைந்துள்ளது”.

manivannanசூரியன் எப். எம் அறிவிப்பாளரான நவரத்தினம் மணிவண்ணனின் கருத்தை பொறுத்தவரையில் இலங்கையிலே வானொலித் துறையில் பெண்களின் படைப்புக்கள் நன்றாகவே இருப்பதாக கூறுகிறார்.

“பொதுவெளியில் இவர்களுடைய படைப்பு வளர்ச்சி பற்றிய கேள்வி ஆய்வுக்குரியது .ஆனால் நான் பணியாற்றும் வானொலியில் பெண்களின் பங்களிப்பு கூடுதலாகவே இருக்கின்றது .நான் நடாத்துகின்ற சந்திப்போமா என்ற நிகழ்ச்சி காதலர்கள் தங்கள் மன உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியாக அமைகின்றது .இங்கு கூடுதலான பெண்கள் அழகான கவிதைகள் ஊடாக இணைகின்றார்கள் ” என்கிறார் மணிவண்ணன்.

எழுத்து துறையில் பெண்களின் பங்களிப்புக்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்கிறார் வட மாகாண சுகாதார அமைச்சின் உதவி செயலாளர் திருமதி எஸ். சுஜீவா.

” உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளை விடவும் வெளியூர் எழுத்தாளர்களின் படைப்புகள் கவர்ச்சியானதாக அமைகின்றது . எமது சமுதாயத்தில் உள்ள பெண்கள் எழுதும் நேரம் குறைவாக காணப்படுவதுடன் அவர்கள் பொருளாதார பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றனர் . இதனால் அவர்கள் எழுதும் படைப்புகளை எங்கு சென்று வெளியிடுவது ,சமுதாயத்தில் அவைகளை எந்த அளவிற்கு ஏற்று கொள்வார்கள் என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. அத்துடன் வாசிக்கும் தன்மையும் குறைவாகவே காணப்படுகின்றது .இளம் சமுதாயத்தினரை விட வயது முதிர்ந்தவர்களே இன்று அதிகம் வாசிப்பில் ஈடுபடுகின்றனர் .e -mail, internet என்பவற்றில் வாசிப்பவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். குடும்ப பொறுப்புக்களை சுமந்தவண்ணம் தமது எழுத்து மற்றும் வெளியீட்டு வேலைகளை பார்க்க வேண்டிய நிலைமை பெண் எழுத்தாளர்களுக்கு உள்ளது .பெண்கள் கஷ்டபட்டு எழுதினாலும் அதற்குரிய அங்கீகாரம் சமூகத்தில் கிடைபதில்லை. இதனால் அவர்களின் உத்வேகம் மற்றும் ஆர்வம் மழுங்கடிகபடுகின்றன .

இவர்கள் அனைவரினதும் கருத்துக்களில் புதைந்திருக்கும் ஒரு உண்மை என்னவென்றால் ஈழத்தில் பெண்களின் சிந்தனைத்திறனும் எழுத்தாற்றலும் குறைந்துவிடவில்லை என்பது புலனாகிறது. ஆனால் அவர்களின் இந்த ஆற்றல் எழுத்து வடிவம் பெற்று அச்சில் வெளிவருவதற்கு பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. இவை நன்கு ஆராயப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.