செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு எதிரான வசனத்தால் ‘மாசு’ படத்துக்கு வரிவிலக்கு மறுப்பு! சினேகன் அதிரடி

ஈழத் தமிழர்களுக்கு எதிரான வசனம் இருந்ததால் தான் மாசு என்கிற மாசிலாமணி படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை என பாடலாசியர் சினேகன் கூறியுள்ளார்.

சாந்தன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:

‘மாசு படத்துக்கு வரிவிலக்கு கிடையாது. பட உரிமையை சன் டிவிக்கு கொடுத்ததால் தான் மறுக்கப்பட்டது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.அது கிடையாது. மாஸ் என்பது தமிழ்ப் பெயர் இல்லை என்பதாலும் இல்லை. உண்மை என்ன தெரியுமா?

நேற்று, சம்பந்தப்பட்ட அதிகாரியின் குறிப்பேட்டைப் பார்த்தேன். திருப்தியாக இருந்தது. மாசு படத்தின் ஒரு இடத்தில், நீ ஈழத் தமிழ் பேசுகிறவனா, உன்னை உதைக்கணும் என்று வசனம் வருகிறது. அதைக் கோடிட்டு ஒரு தமிழ் துறையைச் சார்ந்த அதிகாரி எழுதியிருக்கிறார், ஈழத் தமிழையும் ஈழத் தமிழர்களையும் கொச்சைப்படுத்துவதால் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு கிடையாது என்று. இப்படிப்பட்ட அதிகாரிகளும் இருக்கிறார்கள். இதற்கு நிறைய அதிகாரிகள் வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள். இதே படக்குழு அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். ஆனால் முடியாது என்று சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன வசனத்தைச் சரிசெய்து மாற்று வசனம் வைத்துள்ளார்கள்’ என்றார்.