செய்திகள்

ஈழப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரான கி.பி.அரவிந்தன் காலமானார்

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் பிரான்சில் உள்ள மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.

கவிஞரும், எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலப் பகுதியில் சுந்தர் என அழைக்கப்பட்ட அவர், ஈழப்போராட்டத்தில், முதன்முதலில் சயனைட் அருத்து உயிரித்தியாகம் செய்த ராட்ட முன்னோடியான பொன் சிவகுமாரனுடன் இணைந்து செயற்பட்டவர்.

1990களின் முற்பகுதியில் பிரான்சில் குடியேறிய அவர், அங்கிருந்து கடைசி வரை ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பணியாற்றி வந்தவராவார்.

1953ம் ஆண்டு நெடுந்தீவில் பிறந்த இவர், பாடசாலைப் படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார்.

1972 அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான துண்டறிக்கையை விநியோகித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதான மூன்று தமிழ் இளைஞர்களில் கி.பி.அரவிந்தனும் ஒருவர்.
1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார்.

அதையடுத்து, ஈரோஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய அவர், 1990களின் ஆரம்பத்தில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தார்.

அங்கிருந்து அவர், பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றியதுடன், ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தவர்.