செய்திகள்

ஈழ விடுதலையை நிலைநாட்ட பார்வதி அம்மையாரின் நினைவு தினத்தில் சபதம் ஏற்போம் : வைகோ அழைப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையாரின் நினைவு தினத்தில் தமிழீழ விடுதலையை நிலைநாட்ட சபதம் ஏற்போமென ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

பார்வதி அம்மையாரின் நினைவு தினம் நேற்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் விடுத்த அறிக்கையிலேயே வைக்கோ இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது –

உலகத் தமிழர்களின் நெஞ்சத்தை துன்ப இடி தாக்கிய துயரமான நாள்தான் இன்றைய பெப்ரவரி 20ஆம் நாள் ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2011 இல் வீரத்தாய் பார்வதி அம்மையார் தாங்க முடியாத சித்திரவதைகளை மனதில் சுமந்துகொண்டே இம்மண்ணைவிட்டு மறைந்தார்.

தமிழர்களின் வரலாற்றில் அழியாத புகழ் படைத்த பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளையும் தாயார் பார்வதி அம்மாளும் வழிபடத்தக்கவர்கள்.

சின்னஞ்சிறு பிரயாகத்தில் தாயாக விடுதலைக்காக வல்வெட்டித் துறை இல்லத்தைவிட்டு வெளியேறிச் சென்ற தங்கள் வீர மைந்தனை பல கட்டங்களில், வருடக்கணக்கில் சந்திக்க இயலாமலே இருந்தார்கள்.

2010 ஜனவரி 7ஆம் நாள் வேலுப்பிள்ளை சித்திரவதைகளைத் தாங்கியவாறு இராணுவ முகாமில் மறைந்தார். உள்ளம் சுக்கல் நூறாகிப்போன பார்வதி அம்மையார் பிணி வயப்பட்டு மிகவும் நலிந்தநிலையில் மலேசிய நாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மலேசியாவில் இருந்து விமானத்தில் பயணித்து 2010 ஏப்ரல் 16ஆம் நாள் இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.

பார்வதி அம்மையார் விமானத்தைவிட்டு கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை. காலடிகள் தமிழக மண்ணில் படாமலே திருப்பி அனுப்பப்பட்டார். நாங்கள் வேதனையால் துடித்தோம். யாழ்.மருத்துவ மனையிலேயே உள்ளமும் உடலும் நலிந்து படுக்கையில் இருந்தார். 2011 பெப்ரவரி 20ஆம் திகதி அன்னை பார்வதி அம்மையார் மறைந்தார். வல்வெட்டித்துறையில் அம்மையாரின் இறுதிச் சடங்குகளின் போது நான் தொலைபேசி வாயிலாக இரங்கல் உரை ஆற்றினேன். சிதையில் வைத்து நெருப்பு மூட்டப்பட்ட பின் இராணுவத்தினர் மூன்று நாய்களை சுட்டுக்கொன்று அந்த நாய்களின் உடல்களை அன்னையின் சிதையில் வீசிய கொடூரச் செயல் நடந்தது. உலகத்தில் இப்படிப்பட்ட மாபாதகச் செயல் எங்கும் நடந்தது இல்லை.

தாய்குலத்தின் அந்த மணி விளக்கையும் அந்த உத்தம தந்தையையும் மனதால் வணங்கியவாறு பலமுறை சந்தித்தேன். நமது அன்னையார் உடல்நலம் குன்றி திருச்சியிலும், முசிறியிலும் சிகிச்சை பெற்ற போதும் பல முறை சென்று பார்த்திருக்கிறேன்.

எனது மூத்த மகளின் ஆண் பிள்ளையை பார்வதி அம்மையார் வேலுப்பிள்ளை 1997 ஆம் ஆண்டு என் பேரனுக்கு பிரபாகரன் என்னும் பெயர் சூட்டும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. 1998 நவம்பரில் என் மகன் திருமணத்துக்கு இருவருமே வந்து ஆசி வழங்கியபேறும் கிட்டியது. ஈழத் தமிழர் குலத்தின் வழி பாட்டக்குரிய அன்னை பார்வதி அம்மையாரின் நினைவு நாளில் அவரது இதயக் கனவுகளை நனவாக்க சுநத்திரத் தமிழ் ஈழ விடுதலையை நிலைநாட்ட சபதம் ஏற்போம் எனக் கூறியுள்ளார்.