செய்திகள்

உக்ரேன் கிளர்ச்சியாளருக்கு ஆயுத விற்பனை: சர்வதேச விசாரணைக்கு திட்டம்

உக்ரேன் நாட்டின் பயங்கரவாத குழுவுக்கு ரஷ்யாவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் ஆயுதங்களை பெற்றுக்கொடுத்தாரென்ற குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது ஆகையினால் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சீனாவிலிருந்து நாடுதிரும்பியதும் இந்த குழுவின் உறுப்பினர்களை பெயரிடுவா ரெனவும் பிரதி வெளிவிவகார அமைச் சர் அஜித் பி. பெரேரா நேற்றுத் தெரிவித்தார்.

ரஷ்யாவின் இலங்கைக்கான முன்னால் தூதுவர் உக்ரேன் நாட்டின் பயங்கரவாத குழுவுக்கு ஆயுதங்களை எவ்வாறு, எப்போது, யாருக்கு, எவ்வகையான ஆயுதங்களை பெற்றுக்கொடுத்தார் உள்ளிட்ட விரிவான விளக்கத்தை உக்ரேன் நாட்டின் வெளிவிவகார அமைச்சு இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு எழுத்து மூலம் அனுப்பிவைத்துள்ளதெ னவும் பிரதியமைச்சர் கூறினார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே பிரதி வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை இந்த குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னால் தூதுவர் உதயங்க வீரதுங்க குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்ட போதும் இதுவரையில் வெளிவிவகார அமைச்சுக்கு அறிக்கையிட வில்லை எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை வரலாற்றிலேயே ராஜபக்ஷ அரசாங்கத்தில் தான் ஒரே நாட்டின் தூதுவராக எட்டு வருடங்களாக உதயங்க வீரதுங்க பதவி வகித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.