செய்திகள்

உக்ரைனில் இது வரையில் 220 ரஷ்ய படையினர் பலி

கிழக்கு உக்ரைனில் இதுவரையில் 220 ற்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக புட்டினை கடுமையாக விமர்சிக்கும் எதிர்தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் கொல்லப்பட்ட அந்த நாட்டின் முன்னாள் துணை பிரதமர் பொறிஸ் நெம்சொவ் தயாரித்த அறிக்கையினை அவரது நண்பர்களும், ஊடகவியலாளர்களும் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையிலேயே 220 மேற்பட்ட ரஷ்ய படையினர் கிழக்கு உக்ரைனில் கொல்லப்பட்டமை குறித்து தெரிவிக்க்ப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு கடந்த 10 மாத பகுதியில் 1.04 பில்லியன் டொலர்களை ரஸ்யா செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுடன் பிரகடனப்படுத்தப்படாத யுத்தமொன்று இடம்பெறுகின்றது. ரஸ்யர்களையும் உக்ரைனியர்களையும் எதிரிகளாக்கியவர் என வரலாறு புட்டின் குறித்து குறிப்பிடும் என பொறிஸ் நெம்சொவ்வின் சகா ஓருவர் அறிக்கையை வெளியிட்ட பின்னர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை ஆதாரங்களுடன் நிரூபிக்கும் ஆவணத்தை வெளியிட்டுள்ளோம், என புட்டினின் யுத்தம் என்ற அறிக்கையை வெளியிட்ட பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரெம்ளினின் பேச்சார்ளர் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை உறுதிசெய்ய மறுத்துள்ளார்.கிழக்கு உக்ரைனின் கிளர்ச்சியாளர்களுக்கு ரஸ்யா ஆயுதங்களை வழங்குவதுடன் அவர்களுக்கு ஆதரவாக தனது படையினரையும் ஈடுபடுத்தி வருவதாக மேற்குலகம் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு உக்ரைனில் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை கொல்லப்பட்ட படையினரின் குடும்பத்தினர்pன் தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.