செய்திகள்

உக்ரைனில் மீண்டும் கடும்மோதல்

யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி ஓரு வார காலத்திற்குள் உக்ரைனில் பாரிய மோதல்கள் வெடித்துள்ளன.
உக்ரைனின் முக்கிய நகரான டெபெல்செவேயில் கடும் மோதல்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டொனெஸ்க் மக்கள் குடியரசு என்ற அமைப்பு டெபெல்செவேயில் உள்ள பொலிஸ் நிலையம் மற்றும் புகையிரத நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நகரின் பெருமளவு பகுதி தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும், தேடுதல் இடம்பெறுவதாகவும், பெருமளவு உக்ரைனிய படையினர் சரணடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடும் மோதல்கள் குறிப்பிட்ட நகரின் வீதிகளில் இடம்பெறுவதை உறுதிசெய்துள்ள உக்ரைனிய இராணுவம் குறிப்பிட்ட நகரின் சில பகுதிகள் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதை உறுதிசெய்துள்ளது.
குறிப்பிட்ட நகரின் 25000 மக்களில் 7500 பேர் வரை மோதலில் சிக்குண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மக்களுக்கான குடிநீர் விநியோகம் குறைவடைந்துள்ள நிலையில் மனிதாபிமான நெருக்கடி குறித்த அச்சம் தோன்றியுள்ளது.
மேலும் யுத்த நிறுத்த உடன்பாட்டை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் தங்காளல் அந்த நகரிற்குள் நுழைய முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். உக்ரைன் அரசாங்கம் கிளர்ச்சிக்காரர்களளே யுத்த நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டியுள்ளது. சமாதானத்திற்கான நம்பிக்கைகள் முறிவடைவதாகவும் அது தெரிவித்துள்ளது.