செய்திகள்

உங்களுடைய பிரச்சினைகளை நாம் தெளிவாகத் தெரிந்துள்ளோம்: கூட்டமைப்பிடம் மோடி

“உங்களுடைய பிரச்சினைகளை நாம் தெளிவாகத் தெரிந்துள்ளோம். பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அதனை இலங்கை அரசாங்கத்திடம் நாம் எடுத்துக்கூறுவோம்” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரே சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அக்குழுவில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

கொழும்பு, தாஜ்சமுத்திரா ஹொட்டலில் இன்று மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாக இந்தப் பேச்சுக்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு நீடித்தது.
1
நீண்டகாலமாகத் தொடர்ந்த பிரச்சினைகளால் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் நதட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இவ்வாறு நாட்டைவிட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் தமது சொந்தப் பகுதிகளுக்கு திரும்பிவர வேண்டும் என்பதே தமது விருப்பம் என இந்தியப் பிரதமருக்கு எடுத்துக்கூறினார்.

இலங்கையில் இப்போது உருவாகியிருக்கும் ஆட்சிமாற்றம் இதற்குச் சாதகமானதாக இருப்பதாகத் தாம் கருதுவதாகவும் தெரிவித்த சம்பந்தன், மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு விடயங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவும் முக்கியமான பங்களிப்பை வழங்க வேண்டும் எனக்கோரிக்கைவிடுத்தார்.

இதனைக் கேட்டுக்கொண்ட மோடி, தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் தாம் நன்கு அறிந்துவைத்திருப்பதாகவும், தம்மீது நம்பிக்கை வைத்து செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மோடி கேட்டுக்கொண்டிருக்கின்றது.