செய்திகள்

உங்களைப் போன்று இந்நாட்டு தலைவர்கள் அனைவரும் பேசினால் நாடு உன்னத நிலையை அடையும்: மைத்திரியிடம் கூறிய விக்கி

உங்களைப் போன்று இந்நாட்டு தலைவர்கள் அனைவரும் பேசினால் நாடு உன்னத நிலையை அடையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று தெரிவித்தார்.

வளலாயில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் முதலில் ஆங்கிலப் பேச்சின் பின்னர் ஜனாதிபதி முன்னிலையில் சிங்களத்தில் பேசிய போதே விக்கினேஸ்வனன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது:

“ஜனாதிபதி அவர்களே, சில வார்த்தைகளை உங்கள் மொழியில் உங்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புகின்றேன். அண்மையில் உங்கள் கட்சிக் கூட்டமொன்றில் பேசியிருந்தீர்கள். அப்பேச்சு மிகவும் சிறப்பு மிக்கதாக அமைந்திருந்தது. அதே போன்று இந் நாட்டின் தலைவர்கள் ; அனைவரும் பேசத் தலைப்பட்டால் இந்த நாடு 1948 ஆம் ஆண்டில் இருந்தது போல் மிக உன்னத நிலையை அடையக்கூடும் என்பது எனது கருத்து.

ஏன் 1948ஐ குறிப்பிடுகின்றேன் என்று நீங்கள் நினைக்கக் கூடும். அந்த காலகட்டத்தில்த் தான் சிங்கப்பூர் பிரதமர் லி குவான்யூ கூறியிருந்தார் “நான் விரைவில் சிங்கப்பூரை ஒரு இலங்கையாக மாற்றிக் காட்டுவேன்” என்று. அந்தக் காலகட்டத்தில் உலக நாடுகள் இலங்கையை என்னவாறு மதித்தன என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

ஜனாதிபதி அவர்களே உங்கள் அண்மைய பேச்சுக்கு எமது மனமார்நன்றிகள்.”

இவ்வாறு விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதனையடுத்து விக்னேஸ்வரனுடன் உரையாடிய சந்திரிகா குமாரதுங்க நீங்கள் மூன்று மொழிகளிலும் சிறப்பாக உரையாற்றுகின்றீர்கள் என பாராட்டினார். தம்மால் அவ்வாறு உரையாற்ற முடியாது எனவும் சந்திரிகா சொன்னார்.