செய்திகள்

உடல் உறுப்புகளை தானம் செய்த நடிகர்

‘திருநெல்வேலி’, ‘ஷக்கலக்க பேபி’, ‘கணபதி வந்தாச்சு’, ‘ராரா’, ‘பூவா தலையா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் உதயா.

இவர் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மூத்த மகன் ஆவார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் அண்ணனும் கூட. உதயா நடிப்பில் நகைச்சுவை ஹாரர் படமான ‘ஆவி குமார்’ ஜுன் மாதம் வெளிவர உள்ளது. அடுத்து இவர், ‘உத்தரவு மகாராஜா’ என்ற முற்றிலும் வித்தியாசமான படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.

அதில் மனநலம் பாதிக்கப்பட்டவராக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் உதயா. அறிமுக இயக்குனர் ஆசிப் இந்தப் படத்தை இயக்க ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. உதயா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறார்.

பிறந்த நாளுக்கு ஏதாவது நல்ல விஷயம் செய்ய நினைத்த உதயா, தன்னுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதற்கான பத்திரத்தில் அவர் கையெழுத்திட்டார். மோகன் ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து அவர் இந்த விஷயத்தை செய்துள்ளார்.