செய்திகள்

உடல் நலக்குறைவு: பேரறிவாளன் புழல் சிறைக்கு மாற்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், சிறுநீர் தொற்று நோயால் அவதிப்பட்டு வருவதால் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. 30 ஆண்டுகளாக இவர்கள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பேரறிவாளன் சிறுநீர் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவரை அவ்வப்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்கின்றனர்.

இதனிடையே, வேலூர் சிறைச்சாலையிலுள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பேரறிவாளன் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வருகிறான். அவனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுநீர் தொற்று பிரச்னைக்கு சிகிச்சை அளிக்க வேலூரில் போதிய வசதிகள் இல்லை. இதனால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென சிறைத்துறை டி.ஐ.ஜி.யிடம் பேரறிவாளன் மனு அளித்து உள்ளான். பேரறிவாளன் விரைவில் குணமடைவான்” என்று கூறினார்.

இதனிடையே, பேரறிவாளன் இன்று சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்காகவே அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.