செய்திகள்

உண்மைகளை ஏற்றுக்கொண்டால்தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்: றோர்வே தூதுவரிடம் சி.வி.

“இலங்கையில் நடந்ததைக் கூறி, நடந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டால்தான் நாம் முன்னேறமுடியும். அதன்மூலமே மக்களிடம் நல்லெண்ணத்தையும் சௌகரியத்தையும் ஏற்படுத்தமுடியும். என வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட நோர்வே தூதுவர் எச்.இ. கிறீத் லோகீன்வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இன்று முற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து முதலமைச்சர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது:

“தற்போதைய அரசியல் சூழல், ஏற்பட்ட மாற்றம், மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகள் தமிழ்மக்களுக்கு சாதகமாகவுள்ளனவா போன்ற விடயங்களை நோர்வே தூதுவர் எம்மிடம் கேட்டறிந்தார். அரசியல் சூழ்சிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் எம்முடன் இணைந்து செயற்படுகிறார். அதேபோல பிரதம செயலாளரும் ஒத்துழைக்கிறார்.

ஜெனீவாவில் இலங்கை குறித்த தீர்மானத்தை மார்ச் மாதம் சமர்ப்பிக்காமை, அதை செப்ரெம்பரில் சமர்ப்பித்தல் போன்ற விடயங்கள் தமிழ்மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நோர்வே தூதுவர் எம்மிடம் தெரிவித்தார். ஐ.நா. அறிக்கை பிற்போடப்படுவதால் எங்களுடைய உரிமைகள், உரித்துக்கள், பிரச்சினைகள் மறந்துவிடப்படுமோ என்ற அச்சம் காரணமாகவே நாம் தீர்மானத்தை தாமதப்படுத்த கூடாது எனக் கோரினோம் என்று அவருக்கு தெளிவுபடுத்தினேன்.

அத்துடன் உள்நாட்டு பொறிமுறை என்ற பெயரில் இலங்கை அரசு காலத்தைக் கடத்த முயல்கிறது. அது ஓர் ஆரோக்கியமான விடயமல்ல என்றும் தூதருக்கு நான் கூறினேன். உள்ளக விசாரணை என்பது பக்கச்சார்பானதாக இருக்கும் என்பது தமிழ்மக்களது கருத்தாகவுள்ளது. எனவேதான் நாம் அதை நம்பவில்லை என்றும் நான் கூறினேன்.

சர்வதேச நாடுகள் இலங்கை குறித்து போதிய விளக்கங்களுடனேயே உள்ளன. எனவே தமிழ்மக்கள் விடயத்தில் ஐயப்படவேண்டிய அவசியமில்லை. நோர்வே தமிழ்மக்களுக்கு சார்பான நடவடிக்கைகளையே கடந்தகாலங்களில் எடுத்து வந்திருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

இன அழிப்பு பிரேரணை இந்த நேரத்தில் கொண்டு வந்திருக்கவேண்டிய அவசியமில்லை. தமிழ்மக்களுக்கு சார்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அதை தடுப்பதாக இது அமைந்துவிடும் என்று அவர் எம்மிடம் சொன்னார். தமிழ் மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாகவே நாம் பிரேரணையைக் கொண்டுவந்தோம்.

இங்கு நடைபெற்ற விடயங்களையே ஆவணம் சொல்கிறது. அதைபற்றி எவரும் பிழைசொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அறிக்கையில் பிழையிருந்தால் எங்களுக்கு கூறலாம். ஆனால் அப்படிக் கூறமுடியாது. காரணம் சர்வதேச தரத்தில் நாம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். என்று அவருக்கு எடுத்து விளக்கியிருக்கிறேன்.

இந்த நாட்டிலே இன நல்லிணக்கம், சுமூக அரசியல் சகோதரத்துவம் போன்றனவற்றையே சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது. இவற்றுக்கு பாதகமாக நடவடிக்கைகள் எடுத்தால் நல்லதாக அமையாது என்றும் அவர் கூறினார். நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை பாதகமாக எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. காரணம் நடந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டால்தான் நாம் முன்னேறமுடியும். அதன்மூலமே மக்களிடம் நல்லெண்ணத்தையும் சௌகரியத்தையும் ஏற்படுத்தமுடியும். என்று அவருக்கு தெளிவுபடுத்தினேன்” என்றார்.