செய்திகள்

உதயங்க நிரபராதியென்றால் விசாரணைகளுக்கு ஏன் வரமுடியாது? அஜித் பெரேரா கேள்வி

உதயங்க வீரதுங்க நிரபராதியாக விருந்தால் நேரில் வந்து விசாரணைகளுக்கு சாட்சியங்களை வழங்க ஏன் மறுக்கிறாரென அஜித் பி. பெரேரா கேள்வியெழுப்பினார்.

ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பெயரை உபயோகித்து வேறு எவரோ அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். ஊடகங்கள் அந்த அறிக்கையின் மூலப்பிரதியினை விசாரணைகளுக்காக வழங்கினால் அவர் தங்கியிருக்கும் இடம் மற்றும் அவருக்கு உதவும் நபர்களை கண்டுபிடிக்க இலகுவாக இருக்கு மென்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் உதயங்க வீரதுங்க குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளிக்கை யிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ரஷ்யாவின் முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்க எங்கு இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது. ஜனவரி 28 ஆம் திகதிக்குப் பின்னர் அவர் எவர் கையிலும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உதயங்க வீரதுங்க, தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் தான் ஒரு நிரபராதியெனவும் தற்போது உக்ரேன் அரசாங்கத்திலேயே தங்கியிருப்பதாகவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கை உதயங்கவினாலேயே எழுதப்பட்டிருக்கும் என்பதில் நம்பகதன்மையில்லை எனினும் உக்ரேன் அரசாங்கம் இரண்டு தடவைகள் முறைப்பாடு செய்துள்ள நிலையில் அவர் எவ்வாறு அங்கே தங்கிருக்க முடியுமெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. இதில் உதயங்க முக்கிய தரகராக செயலாற்றியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.