செய்திகள்

உத்தம வில்லனுக்கு பிரச்னைக்கு தீர்ந்தது: இன்று படம் வெளியாகிறது

நடிகர் கமலஹாசன் நடித்த உத்தம வில்லன் திரைப்படம் இன்று திரையிடப்படுகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘உத்தம வில்லன்’ திரைப்படம் நேற்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான டிக்கெட் முன்பதிவும் செய்யப்பட்டது.

ஆனால், நேற்று இந்த படம் திரையிடப்படவில்லை. இதனால், டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து ஏமாற்றம் அடைந்ததுடன் ஒருசில இடங்களில் ரகளையிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, டிக்கெட்டுக்களுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் ரசிகர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

உத்தம வில்லன் திரைப்படம், பைனான்ஸ் பிரச்னையால் திரையிடப்படுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளருக்கும், பைனான்சியர்களுக்கும் இடையே சென்னையில் உள்ள பிலிம்சேம்பர் கட்டடத்தில் பேசுவார்த்தை நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை, பகல் முழுவதும் நீடித்தது. இருந்தாலும் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.

இதையடுத்து, தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் தரப்பினருக்கு இடையே சமரசம் செய்யும் முயற்சியில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இவர்களின் பேச்சுவார்த்தை நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நான்கு மணி வரை விடிய விடிய நடைபெற்றது.

இந்நிலையில், இன்று காலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கலைப்புலி எஸ்.தாணு, ”உத்தம வில்லன் திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளர், பைனான்சியர் இடையே விடிய விடிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, உத்தமவில்லன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகும்” என்றார்.