செய்திகள்

உம்மன் சாண்டி அரசுக்கு ஆபத்து: ஆளுங்கட்சி கூட்டணியில் விரிசல்

கேரள காங்கிரஸ் (எம்) கட்சியில், மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், உம்மன் சாண்டி தலைமையிலான அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கேரளாவில் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. 140 உறுப்பினர்களை உடைய சட்டசபையில், பெரும்பான்மைக்கு, 73 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு, 75 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளில், கேரள காங்கிரஸ் (எம்)க்கு, ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கட்சியின் மூத்த தலைவரா மாணி, மாநில நிதி அமைச்சராக பதவி வகிக்கிறார். கேரளாவில் மதுபான விடுதிகளை திறப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால், இவர் பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜார்ஜும், மாணிக்கு எதிராக பகிரங்கமாக பேட்டி அளித்து வருகிறார். ‘நிதி அமைச்சர் பதவியிலிருந்து, அவர் விலக வேண்டும்’ என, வலியுறுத்தி வருகிறார். இதனால், கேரள காங்கிரஸ் (எம்)மில், இரண்டு கோஷ்டிகள் உருவாகி உள்ளன. இதில், ஏதாவது ஒரு கோஷ்டி, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் வாங்கினாலும், உம்மன் சாண்டி அரசு கவிழ்ந்து விடும்.

இதனால், மாணிக்கும், ஜார்ஜுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் வகையில், முதல்வர் உம்மன் சாண்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும், மாநில தொழில் துறை அமைச்சருமான குஞ்சாலி குட்டி ஆகியோர், இரண்டு பேருடனும் பேச்சு நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, உம்மன் சாண்டி அரசு கவிழ்ந்தால், மற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க, இடதுசாரி கூட்டணி தலைவர்கள் தயாராகி வருகின்றனர். இடதுசாரி கூட்டணிக்கு, கேரள சட்டசபையில், 65 உறுப்பினர்கள் உள்ளனர்.