செய்திகள்

உயிருக்கு உத்தரவாதமளிக்கப்பட்டமால் ‘கோதா’ முகாம் பற்றிய சாட்சிகளை வெளிப்படுத்த தயார்: சுரேஷ்

இரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சாட்சியங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அவற்றை வெளிப்படுத்த தான் தயார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

“கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகசிய முகாம்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படாமல் அவ்வாறான முகாம் இல்லை என பிரதமரும் நீதியரசரும் கூறுகின்றனர். முன்னாள் ஜனாதிபதியின் ஊழல்கள் தொடர்பாகவும் அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பாகவும் விசாரிக்க குழு அமைத்துள்ளார்கள்.

ஆனால், இரகசிய முகாம்கள் தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் நடத்தாது இராணுவ தளபதியும் கடற்படை தளபதியும் அவ்வாறான முகாம் இல்லை என கூறினர், எனவே, அவ்வாறான இரகசிய முகாம்கள் இல்லை என பிரதமரும் நீதியரசரும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

“திருகோணமலையில் கோட்டாபய எனும் பெயர் கொண்ட இரகசிய தடுப்பு முகாம் இருந்தது. அதில் 700 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது அவ்வாறான முகாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் முன்னர் இருந்தது. இதற்கான சாட்சியங்கள் என்னிடம் உண்டு. முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு சாட்சியங்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் சாட்சியங்களை முற்படுத்துவேன்.

அந்த முகாம் தொடர்பிலும் அந்த முகாமில் இருந்தவர்கள் யார்? அவர்கள் இப்பொழுது எங்கே? எதற்காக தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு விடையையே நாங்கள் கோருகிறோம். இறுதி யுத்தத்தின் போது பேருந்துகளில் 20 ஆயிரம் பேர்  ஏற்றி செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்கள். அவர்களை ஏற்றி சென்றதை அவர்களுடைய உறவினர்கள் நேரில் கண்டுள்ளார்கள்.

எனவே, இந்த விடயங்களை முன்னைய அரசாங்கம் போல் மூடி மறைக்க முயலாமல் அது தொடர்பான பூரண விசாரணையை புதிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து கடற்படையிடம் கேட்டோம், இராணுவத்தினரிடம் கேட்டோம் அவர்கள் அவ்வாறான முகாம்கள் இல்லை என்கிறார்கள். எனவே ,அவ்வாறான முகாம் இல்லை என்ற பதிலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.