செய்திகள்

உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த இளைஞர்கள்

ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றாமல், தங்களது செல்போனில் இளைஞர்கள் வீடியோ எடுத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

லைலா தங்கச்சன் (47) என்ற பெண், தனது வேலையை முடித்துக் கொண்டு நேற்று மாலை கேரள மாநிலம், முட்டபாலம் ரயில்வே கேட் பகுதிக்கு வந்திருக்கிறார். அப்போது அந்த தண்டவாளத்தில் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்திருக்கிறது. அதை நிறுத்துவதற்காக கேட் கீப்பர் சிவப்புக் கொடி காட்டியிருக்கிறார்.

இதையடுத்து லாலா தங்கச்சன் ரயில்வே கேட்டை கடக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், வேகமாக வந்த ரயில் லாலா மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு இருந்த சில இளைஞர்கள், லாலாவை காப்பாற்ற முயற்சிக்காமல் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த பெண் அவர்களை நோக்கி உதவி கேட்டும், அவர்கள் படம் எடுப்பதிலேயே குறியாக இருந்திருக்கின்றனர்.

உயிருக்கு போராடியவரை காப்பாற்றாமல், படம் எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.