செய்திகள்

உயிரை பணயம்வைத்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம்: மைத்திரி அறிவிப்பு

“எமது உயிரை பணயம் வைத்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். அதனால் இதனை விளையாட்டாகக் கருத வேண்டாம். வன்முறைகளால் ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்ள முடியாது என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பக்கமூனவில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் மைதிரிபால சிறிசேன மேலும் தெரிவித்ததாவது:

“எமது உயிரை பணயம் வைத்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். ஆகவே இதனை விளையாட்டாக கருத வேண்டாம் என மிகவும் தெளிவாக கூறுகின்றேன். சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க , சரத் பொன்சேகா மற்றும் எனது உயிருக்கும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. இவற்றை எதிர்கொள்வோம். பின்னோக்கி செல்ல மாட்டோம். இந்த தேர்தலை நாம் எதிர்கொள்வோம். எமது பிணங்களுக்கு மேல் வன்முறை ஊடாக மஹிந்த ராஜபக்ஸ தேர்தல்களில் வெற்றிப்பெற நினைத்தால் அது ஒருபோதும் இடம்பெறாது.”

இவ்வாறு மைத்திரிபால குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது உயிர் மக்களின் பொறுப்பில் உள்ளதாக குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது:

“மோசடியான கொலைகார இந்த ஆட்சியை நாம் உடனடியாக மாற்ற வேண்டும். ஜனாதிபதி எதனை பேசுகின்றார் என்று தெரியவில்லை. உளருகின்றார். அதிகாரத்தை விட்டு செல்ல அவர்களுக்கு விருப்பம் இல்லை. தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதே அவர்களது அவா. நாம் ஆரம்பித்த இந்த தூய்மையான போராட்டத்தை 8 ஆம் திகதி வெற்றிப்பெறும் வரை கைவிடப்போவதில்லை. ஜனாதிபதி எதனை செய்தாலும் எமது உயிர்கள் மக்களின் பொறுப்பில் உள்ளது. நீங்கள் எமக்காக முன்னில்லுங்கள். எம்மை பாதுகாத்துக் கொள்ளுங்கள் இந்த போராட்டத்தை நாம் வெற்றியீட்டிக் காட்டுகின்றோம்.