செய்திகள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: பின்னி, அக்சருக்கு வாய்ப்பு

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் விபரம் இன்று செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

15 வீரர்கள் கொண்ட இந்திய அணி விவரம்: தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி, அம்பாத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, அஜிங்கிய ரஹானே, மொகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், இஷாந்த் சர்மா, புவனேஷ் குமார், அஸ்வின், உமேஷ் யாதவ்.

30 வீரர்கள் கொண்ட இந்திய உத்தேச அணியில் இடம்பெற்ற சில முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

குறிப்பாக ரோஹித் சர்மா,ஷிகர் தவனுக்கு மாற்று தொடக்க விரர் இல்லை. அஜிங்கிய ரஹானே இருக்கிறாரே என்று கூறலாம். ஆனால் அஜிங்கிய ரஹானே நடுக்களத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது அவசியம். இந்நிலையில் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து நிரூபித்து வரும் ராபின் உத்தப்பாவுக்கு வாய்ப்பளித்திருக்கலாம். உத்தப்பாவுக்கு வாய்ப்பளிக்கப் படவில்லை.

ஜடேஜா தோள்பட்டைக் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பினார். இசாந்த் சர்மாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது, ஆனால் அவருக்கு முழங்கால் பிரச்சினை இருக்கிறது. அதேபோல் கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, முரளி விஜய் ஆகியோர் 30 வீர்ர்கள் கொண்ட உத்தேசப் பட்டியலில் இருந்தனர். இவர்களுக்கு வாய்ப்பளிப்பது மிகமிகக் கடினம் என்று தெரிகிறது.

ஸ்டூவர்ட் பின்னிக்கு பதிலாக நிச்சயம் காஷ்மீர் ஆல்ரவுண்டர் பர்வேஸ் ரசூல் இடம்பெற்றிருக்க வேண்டும். தவல் குல்கர்னி, மோகித் சர்மா ஆகியோரும் 30 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர். அதேபோல் வருண் ஆரோனும் வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.

இளம் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், மணீஷ் பாண்டே, ராபின் உத்தப்பா, பர்வேஸ் ரசூல் ஆகியோருக்கு நிச்சயம் தங்கள் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றமளித்திருக்கும். ஆனால், பொதுகாக அதிகம் ஆச்சரியமளிக்காத எதிர்பார்த்த அணித் தேர்வே என்று கூறலாம்.