செய்திகள்

உலகம் முழுவதுமிருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிரவாத அமைப்புக்களில் இணைவு! ஐ.நா அறிக்கை

உலக நாடுகள் முழுவதிலும் இருந்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கெய்தா போன்ற கொடிய தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத இயக்கங்களில் சேர்பவர்களை பற்றி ஆராய்வதற்காக அமைத்த ஆணையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. மேலும், அந்த ஆணையம் தெரிவித்துள்ள தகவலின் படி பத்து ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரங்களாக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 71 சதவிதம் அதிகரித்து 25 ஆயிரமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஐ.எஸ்., அல்- கொய்தாவில் சேரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் ஐ.எஸ்., அல்-கெய்தா தீவிரவாத அமைப்புகளில் இணைந்து போரிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தானில் 6500 வெளிநாட்டினர் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக துனிசியா, மொரோக்கோ, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா, மாலைதீவு, பின்லாந்து மற்றும் டிரினிடாட், டொபாகோ போன்ற நாடுகளில் இருந்து தீவிரவாத இயக்கங்களில் சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இவர்களுக்கு பயிற்சி அளித்து வெளிநாடுகளின் உணவகங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. இதை தடுக்காவிட்டால் வருங்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அந்த ஆணையம் எச்சரித்துள்ளது.

தீவிரவாத அமைப்புகளில் சேர்பவர்களின் பற்றி 10 சதவிதம் தகவல்கள் மட்டுமே உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும். அந்த தகவல்களை அனைத்து நாடுகளும் தங்களுக்கு இடையில் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.