செய்திகள்

உலகில் உள்ள மூன்று தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் ஹசார்டு: செல்சியா மனேஜர் புகழாரம்

செல்சியா- மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் செல்சியா அணி 1-0 என வெற்றிப் பெற்றது. இந்த வெற்றிக்கு காரணமான கோலை செல்சியா அணி வீரர் ஹசார்டு அடித்தார். இதன் மூலம் செல்சியா அணி 10 புள்ளிகள் அதிகம் பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இந்த வெற்றிக்குப் பின் செல்சியா அணியின் மானேஜர் மவுரினோ கூறுகையில், உலகில் உள்ள கால்பந்து வீரர்களின் மிகச் சிறந்த மூன்று பேர்களில் ஒருவர் ஹசார்டு என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

ஹாசார்டு ஒரு சிறுவன்தான். ஆனால், குடும்பஸ்தனாகவும் உள்ளார். தான் உலகின் தலைசிறந்த 3 வீரர்களில் ஒருவன் ஹசார்டு என்று அவருக்குத் தெரியும். இதன் மூலம் அவருக்கு பொறுப்புகள் உண்டு. அந்த பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டு வருகிறார். மக்கள் விரும்பினால் ஹசார்டு இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதைப் பெறுவார். ஆனால், பிரீமியர் போட்டியில் வெற்றி பெற்று அந்த விருதைப் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் ஏராளமான வீரர்களை பார்த்துள்ளேன். ஆனால், மிகவும் அடக்கமான, எளிமையான வீரர் ஹசார்டுதான்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

24 வயதாகும் பெல்ஜியம் வீரரான ஹசார்டு, 2010-ம் ஆண்டு முதன்முதலாக பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை செல்சியா அணி பெற காரணமாக இருந்தார். அந்த தொடரில் அவர் 18 கோல்கள் அடித்ததுடன், 10 கோல்கள் அடிக்க உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.