செய்திகள்

உலக காசநோய் தினம் பங்குனி 24, 2021

மருத்துவர். சி. யமுனாநந்தா

உலக காசநோய் தினம் வருடா வருடம் பங்குனி மாதம் 24ம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. 1882ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் நாள் றொபோட் கொச் என்ற விஞ்ஞானி காசநோய் மைக்றோ பக்றீரியம் ரியுபகுளோசிஸ் என்ற பக்றீரியாவால் ஏற்படுகின்றது என்பதை உலகிற்கு நுணுக்குக்காட்டியூடு எடுத்துக் காட்டிய தினமே உலக காசநோய் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

உலகில் நூற்றாண்டுகளுக்கு மேலாக சமூகத் தொற்றாக உள்ள நோயே காசநோயாகும். இது காற்றினால் பரவும் நோயாகும். காசநோய்க் கட்டுப்பாடு தொடர்பான உலக அனுபவம், அணுகுமுறைகள் தற்போது உலகை அச்சுறுத்தும் கொரோனா நோயினை கட்டுப்படுத்தப் பெரிதும் உதவின. பொதுவான சுகாதார நடைமுறைகள், முகக்கவசம் அணிதல், எவர் எதிரிலும் இருமுதல், தும்முதல் செய்யாது கைக்குட்டைகளை உபயோகித்தல் என்பன, காசநோய்க் கட்டுப்பாட்டில் முக்கியமானவை. அவ்வாறே கொரோனாக் கட்டுப்பாட்டிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.

காசநோயின் அறிகுறிகள்: இருமல், மாலைநேரக் காய்ச்சல், சளியுடன் இரத்தம் வெளிவரல், உடல் மெலிதல், களைப்பு என்பன-வாகும்.

தற்போதைய கொரோனாச்சூழல் காசநோயாளிகளை இனங்கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. காசநோய் அதிகம் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியவர்களாக சலரோக நோயாளிகள், தூசுகளில் வேலை செய்வோர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சளிப்பரிசோதனைகள் எக்ஸ்கதிர் பரிசோதனைகள் மூலம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

2021ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் திகதி உலககாசநோய் தினத்தின் தொனிப்பொருள் ‘கடிகாரம் ‘டிக்டிக்டிக்’; என இயங்கிக் கொண்டுள்ளது’ என்பதாகும். அதாவது காலம் கடந்து செல்கின்றது நாம் அடைய வேண்டிய இலக்கினை அடைய விரைவாகச் செயற்பட வேண்டும் என்பதாகும்.

கொரோனாத் தொற்றுப் பெரும்பாலும் நுரையீரல்களையே பாதிக்கின்றது. கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நாட்பட்ட சுவாச அழற்சி, காசநோய் என்பன ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு. மேலும் உலகில் கொரோனாத் தொற்றால் காசநோய்க்கான, சிகிச்சை வழங்கலில் தடங்கல்கள் ஏற்பட்டன. குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கலிலும் உலகளாவியரீதியில் தடங்கல்கள் ஏற்பட்டன. இவை அனைத்தும் காசநோயினை உலகில் 2035ம் ஆண்டளவில் இல்லாது செய்யும் செயற்திட்டங்களில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இன்று உலகில் 2 பில்லியன் மக்கள் காசநோய்க் கிருமியின் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்களுக்கு காசநோய் ஏற்படுகின்றது. இதில் 1 மில்லியன் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். எயிட்ஸ் நோயாளிகளில் 800,000 பேருக்கு வருடந்தோறும் காசநோய் ஏற்படுகின்றது. இன்று உலகில் ஆண்டுதோறும் 3 மில்லியன் காசநோயாளிகளுக்கு எந்தவித சிகிச்சை வசதிகளும் கிடைப்பதில்லை.

காசநோய்க் கட்டுப்பாடு, சிகிச்சை வழங்கல் தொடர்பாக முன்னுரிமை வழங்குவதற்கு உலக காசநோய்த் தினத்தில் காசநோய்க் கட்டுப்பாட்டுக்கான துரித அணுகுமுறைகளையும், இலகு அணுகுமுறைகளையும் ஏற்படுத்த அறைகூவல் விடவேண்டிய தருணம் ஆகும். மேலும் கொரோனாக் கட்டுப்பாட்டில் அடைந்த வெற்றிகரமான செயற்திட்டங்களை உலக நாடுகள் காசநோய்க் கட்டுப்பாட்டிற்கும் பிரயோகிக்க வேண்டும். உலகம் கொரோனா உடன் காசநோயினையும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

கொரோனாத் தடுப்பில் எவ்வாறு முழு உலகமும் விரைவாகச் செயற்பட்டுத் தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் வெற்றி பெற்றதோ அவ்வாறே காசநோய்க் கட்டுப்பாட்டிலும் விரைவாகச் செயற்பட முடியும்.

மிகவும் அண்மைய வருடங்களில் காசநோயினை விரைவாகக் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் காசநோயினை நான்கு மாதங்களில் குணப்படுத்த முடியும். மேலும் காசநோயாளிகளின் உடலில் நோயெதிர்க்கும் திறனை அதிகரிக்கும். மருந்துகளை அளித்துக் காசநோயாளிகளை பத்துத் தினங்களில் குணப்படுத்தக்கூடிய சாத்தியங்களும் மருத்துவ ஆராய்ச்சியில் கைகூடியுள்ளது.

கொரோனாத் தடுப்பு மருந்துத் தயாரிப்பில் இந்திய அரசு உலகில் முன்னணி வகித்து பாரிய மருத்துவ மனிதநேயப்பணியினைப் புரிகின்றது. இன்று உலகில் 40க்கு மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனாத் தடுப்பு மருந்தினை வழங்குகின்றது.
பாரத கொரோனாத் தடுப்புமருந்துச் செயற்திட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில், பாரத மருத்துவ ஆளணியினரால் காசநோய்க்கான மருந்துகளை நான்கு மாதங்களில் குணப்படுத்துவதற்கும் மேலும் ஒரு சில வாரங்களில் குணப்படுத்தக்-கூடிய மருந்து வகைகளையும் உருவாக்க முடியும். இதனை காசநோயாளர்களது நலன்கருதி உற்பத்தி செய்து விநியோகிக்க வேண்டும். இதன்மூலம் காசநோயினை எளிதில் குணப்படுத்தக்கூடிய நோயாக மாற்றி, காசநோயின் பாதிப்பினை உலகில் இல்லாது செய்யலாம்.

‘நடையிடு நடையிடு காசம் களையவே
விடைகொடு விடைகொடு தரணியில் காசநோய் தனையே’!