செய்திகள்

உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பில் இன்னும் உறுதியான முடிவில்லை: நீதி அமைச்சர் விஜயதாச

இலங்கைப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதற்கான முடிவை இன்னமும் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என்று இலங்கையின் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லண்டனில் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர், அங்கு வழங்கியுள்ள பேட்டி ஒன்றிலேயே இதனைத் தெரிவித்தார்.  ஐ.நா. அறிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு விசாரணை ஒன்றுக்கு அரசாங்கம் தயாராகியுள்ளதா எனக் கேட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிதததாவது:

“சர்வதேச சமூகம் முன்னைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்து போனமைதான் இங்கு பல பிரச்சினைகளுக்குக் காரணம். அதனால்தான் ஐ.நா.வின் முன்னாள் தலைமைச் செயலர் போர் முடிந்தவுடன் இலங்கைக்கு வந்தார். அது மட்டுமன்றி போர் முடிந்தபின்னர் இலங்கையில் நடைபெற்றிருப்பவை பற்றி ஆராய்வதற்காக இரண்டு ஏற்பாடுகள் அவர்களால் செய்யப்பட்டன.

ஒன்று உள்நாட்டுப் பொறிமுறை மற்றது சர்வதேசப் பொறிமுறை. ஆனால், உள்நாட்டுப் பொறிமுறையை அரசாங்கம் சரியான முறையில் செய்யாததால் ஐ.நா. சபை மாற்று ஏற்பாடுகளைச் செய்ய முயன்றது. அதன் அடிப்படையில்தான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கை மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தது.

இருந்தபோதிலும் அதனை நாம் பின்போடுமாறு கேட்டோம். எம்மீது அதாவது புதிய அரசாங்கத்தின் மீது இருக்கின்ற நம்பிக்கை காரணமாக ஐ.நா. அதனைப் பின்போட்டுள்ளது.

நல்லிணக்கத்துக்கான சில செயற்பாடுகளை நாம் முன்னெடுத்துள்ளோம். இதன் மூலம் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்த முடியும் என நினைக்கின்றோம். இவற்றின் மூலமாக பிரச்சினையை உள்நாட்டிலேயே தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் முயல்கின்றோம்.

இருந்தபோதிலுரும் உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பில் இதுவரையில் அரசாங்கம் திட்டவட்டமான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் இது குறித்து முடிவெடுக்கப்படும்”  எனவும் அமைச்சர் தெரிவித்தார்.