செய்திகள்

உள்நாட்டுப் போர் தீவிரமான ஏமனில் இருந்து 350 இந்தியர்கள் மீட்பு

ஏமன் நாட்டில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போரில் சிக்கித் தவித்த 40 தமிழக தமிழர்கள் உள்பட 350 பேர் மீட்க்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டில் ஈரான் அதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது. அவர்கள், ஏமன் நாட்டின் விமான நிலையங்கள் உள்ளிட்ட பெரும் பகுதியை கைப்பற்றி விட்டனர். அதனால், சவுதி அரேபியா ஆதரவு பெற்ற அதிபர் அப்த் ரப்பு மன்சூர் ஹதி, தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டார். முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் ஆதரவு படைகளும் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து உள்ளன.

இந்நிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை விரட்டி விட்டு, அதிபர் அப்த் ரப்பு மன்சூர் ஹதியின் கட்டுப்பாட்டில் அதிகாரத்தை கொண்டு வருவதற்காக, சவுதி அரேபியாவும், அதன் நட்பு நாடுகளும் இணைந்து கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த வாரம் முதல் அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றன. சவுதி அரேபிய கூட்டுப்படைகள், விமானங்கள் மூலம் குண்டு வீசி, கிளர்ச்சியாளர்களின் ஆயுதம் மற்றும் ஏவுகணை கிடங்குகளை தகர்த்தன. மேலும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்தையும் குண்டு வீசி தகர்த்தன.

ஆனாலும், ஏமன் நாட்டை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து இன்னும் முழுமையாக மீட்க முடியவில்லை. இதனால், உள்நாட்டு போர் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போரில், ஏமன் நாட்டில் பணியாற்றி வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிக்கித்தவித்து வருகிறார்கள். ஏமன் நாட்டில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நர்சுகள் ஆவர். அவர்கள் வசித்து வரும் தலைநகர் சனா, ஏடன் உள்ளிட்ட பகுதிகளில்தான் சண்டை தீவிரமாக நடந்து வருகிறது.

இதையடுத்து அங்குள்ள இந்தியர்களை மீட்க இந்தியா திட்டமிட்டு, இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சுமித்ரா’ கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைக்காக ஏற்கனவே ஏமன் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அந்த கப்பலை மீட்புப்பணிக்காக ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்துக்கு அனுப்பி வைத்தது. கடந்த திங்கட்கிழமை, ஏடன் துறைமுகம் அருகே சென்ற ஐ.என்.எஸ். சுமித்ரா கப்பல், நேற்று முன்தினம் ஏடன் துறைமுகத்துக்குள் நுழைந்தது.

அந்த நேரம், ஏடன் துறைமுக நகரில் கடுமையான சண்டை நடந்ததால் எங்கு பார்த்தாலும் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது. துறைமுகத்தில் மின்சப்ளை இல்லாமல், கும்மிருட்டாக இருந்துள்ளது. அந்த அசாதாரண சூழ்நிலையில், அங்கு மீட்டுக் கொண்டு வரப்பட்ட 40 தமிழர்கள் உள்ளிட்ட 350 இந்தியர்கள், உடனே ஐ.என்.எஸ்.சுமித்ரா கப்பலில் ஏற்றப்பட்டனர். அவர்களில் 101 பெண்களும், 28 குழந்தைகளும் அடங்குவர்.

350 இந்தியர்களுடன் அங்கிருந்து புறப்பட்ட சுமித்ரா கப்பல், 9 மணி நேர பயணத்துக்குப் பின் நேற்று அண்டை நாடான ஜிபோட்டிக்கு வந்து சேர்நந்து. சுமித்ரா கப்பலில் வந்த 350 இந்தியர்களில், 206 பேர் கேரளாவையும், 40 பேர் தமிழ்நாட்டையும், 31 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தையும், 23 பேர் மேற்கு வங்காளத்தையும், 22 பேர் டெல்லியையும், 15 பேர் கர்நாடகாவையும், 13 பேர் ஆந்திராவையும் சேர்ந்தவர்கள்.

கடல் மார்க்கமாக ஜிபோட்டிக்கு வந்து சேர்ந்த 350 இந்தியர்களையும் ஆகாய மார்க்கமாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சி–17 குளோப்மாஸ்டர்ஸ் ரக விமானங்கள் அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. இதில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு விமானத்தில் ஏற்றப்பட்டு, கேரள மாநிலம் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதிகாலை 2 மணிக்கு வந்து சேர்ந்தனர். மற்றவர்கள் அனைவரும், மற்றொரு விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களும் அதிகாலை 3.25 மணிக்கு மும்பை வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உறவினர்கள் வரவேற்றனர்.

ஏமனில் சிக்கித் தவித்து வரும் மீதியுள்ள இந்தியர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

sumitra1