செய்திகள்

உள்நாட்டு விசாரணை செப்டம்பருக்குள் முடிவடையாது: பிரதி வெளிவிவகார அமைச்சர்

போர்க் குற்றங்கள் குறித்த உள்நாட்டு விசாரணை எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் நிறைவடையாது என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

“செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னதாக, உள்நாட்டு விசாரணை குறித்த கட்டமைப்பு மற்றும் சட்டங்கள் தான் உருவாக்கப்படும்.  செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு முன்னதாக, சட்ட நடைமுறைகளை நிறைவு செய்வது கடினமானது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விசாரணைகளுக்கு காலஅவகாசம் அளிக்கும் வகையில், இம்மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, செப்ரெம்பர் மாதம் வரை வெளியிடப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஒரு முறை மட்டுமே அறிக்கையை சமர்ப்பிப்பதை ஒத்திவைக்க முடியும் என்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை எவ்வாறு அமைத்துக்கொள்வது விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அரசாங்கம் திட்டவட்டமான தீர்மானம் எதனையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கது.