உள்ளக விசாரணைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணைகளின்போது சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியும் காணாமல்போனவர்கள் தொடர்பில் பகிரங்கமாக விபரங்களை வெளியிடக்கோரியும் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவுக்கு அருகில் நடத்தினர்.
இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்;ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் அ.செல்வேந்திரன் மற்றும் அதன் செயலாளர் பாரதிதாசன் உட்பட காணாமல்போனவர்களின் குடும்பத்தினர்,பெண் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
காணாமல்போன உறவினர்களின் புகைப்படங்களை தாங்கிய நிலையில் இந்த போராட்டத்தில் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நாட்டில் நடைபெற்ற யுத்த காலத்தின்போதும் யுத்தம் நிறைவடைந்தபோதும் பலர் காணாமல்போன நிலையில் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பல ஆணைக்குழுக்களின் விசாரணைகளினால் எந்தவித நன்மையும் கிட்டவில்லையென தெரிவித்த போராட்டத்தில் கலந்துகொண்டோர் உள்ளக விசாரணையின்போது சர்வதேச விசாரணையாளர்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் இதுவரையில் காணாமல்போனவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது எட்டப்பட்ட முடிவுகள் தொடர்பில் பகிரங்கமாக பத்திரிகைகளில் அறிக்கையிடவேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இன்று நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறிக்கொள்ளும் நிலையில் காணாமல்போன தமது உறவினர்கள் தொடர்பில் தமக்கு உறுதியான முடிவினை இந்த அரசாங்கம் பெற்றுத்தரவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்;ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் அ.செல்வேந்திரன்,
காணாமல்போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 2200 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.இவற்றில் 332 முறைப்பாடுகள் மட்டுமே விசாரணை செய்யப்பட்டுள்ளது.இவற்றில் காத்தான்குடியில் 90 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டுள்ளது.ஏனையவை தொடர்பில் விசாரணைகள் ஏதும் நடாத்தப்படவில்லை.
இந்த விசாரணைகளின் முடிவு என்ன என்பது தொடர்பில் இதுவரையில் உரிய பதில் எதுவும் வழங்கப்படாத நிலையே உள்ளது.இன்று சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள உள்ளக விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.இவற்றுடன் சர்வதேச விசாரணையாளர்களும் ஈடுபடுத்தப்படவேண்டும்.
நல்லாட்சி என்று கூறும் இந்த அரசாங்கம் காணமல்போனவர்களை கண்டுபிடித்து தரவேண்டிய நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும்.அத்துடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும் விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்கவேண்டும்.இதுவரையில் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவித்தார்.
இதன்போது மகஜர் ஒன்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.