செய்திகள்

உள்ளக விசாரணை குறித்த பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன: ஜெனீவாவில் மங்கள உரை

இலங்கையில் இடம்பெற்றிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் குறித்த உள்ளக விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை உள்ளக விசாரணைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும், ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் தனது உரையில் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

“உள்ளக விசாரணைகள் தொடர்பில் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போதைய சட்டங்களில் திருத்தங்களைச் செய்வது குறித்த விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சர்வதேச விசாரணை அறிக்கையின் உள்ளீடுகளையும் உள்ளக விசாரணையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். சர்வதேச நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட அரசாங்கம் விரும்பம் கொண்டுள்ளது.

பேச்சுவார்த்தைகள், இணக்கப்பாடுகள், கற்றல் மற்றும் புரிந்துணர்வு ஊடாக தீர்வு காணப்படும். இழப்புக்கள் இன்றி யுத்தம் முடிவுறுத்தப்பட்டிருக்க சாத்தியங்கள் குறைவு. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.”

இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் மங்கள, இவ்விடயத்தில் இலங்கை அரசின் செயற்பாடுகளில் நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் சர்வதேச சமூகத்தையும், மனித உரிமைகள் அமைப்புக்களையும் கேட்டுக்கொண்டார்.