செய்திகள்

உள்ளூர் உற்பத்திகளுக்கு சந்தைவாய்ப்பை ஏற்படுத்த வவுனியாவில் வாரஇறுதி சந்தை நடாத்த தீர்மானம்!

வவுனியா மாவட்டத்தின் உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைவாய்ப்பை ஏற்படுத்த வாரஇறுதிச்சந்தை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று கடந்த திங்கள் கிழமை வவுனியா பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்த கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நகரசபை செயலாளர், பிரதேச சபைகளின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

மாவட்டத்திலுள்ள பெண்கள் சுய உதவிக்குழுக்கள், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழுள்ள அமைப்புகள், கைத்தொழில் அபிவிருத்திச்சபையின் கீழுள்ள நிறுவனங்கள், சிறுகைத்தொழில் உற்பத்தியாளர்கள், குடிசைக் கைத்தொழிலாளர்கள் ஆகியோர் எதிர்நோக்கும் சந்தைவாய்ப்பு பிரச்சனைகளை தீர்க்கும் முகமாகவே இவ்வாறான வாரஇறுதி சந்தை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தமிழ் சிங்களப்புதுவருடத்தை முன்னிட்டு சித்திரை மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த சந்தை ஆரம்பிக்கப்படவுள்ளது. தொடர்ந்து மாதாந்தம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாறான வாரஇறுதி சந்தை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளது.

இதுதொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

N5