செய்திகள்

உழைப்பும் – யாழ்ப்பாணமும்

அறிமுகம்

மனித உடலியற்கூறு அசைவுகளுக்கு உழைப்பிற்கு இசைவானது, ஏற்புடையது. வேறு கருத்தில் கூறுவதாயின் மனித உடல் அல்லது புலன்கள் இசைவான, அசைவுகளுக்கு உட்படுத்தப்படாத நிலையில் உடல் ஊனம் ஏற்படலாம். எனவே புலன்களை அசைப்பது, பயன்படுத்துவது, உழைப்பது மனிதனுக்கு இன்றியமையாதது. புலன்களை பயன்படுத்துதல் சார்ந்த விவேகத் திறன் மனிதனை ஏனைய உயிர் வாழ்வனவுகளை விட உயர்ந்தவனாக்குகின்றது. உயிர் ஒன்று உலகில் தோன்றிய உடனேயே தனக்கே பொருத்தமான உழைப்பில் ஈடுபடுகின்றது. அந்த உழைப்பின் வெற்றியிலேயே அதன் உயிர் வாழ்தல் தீர்மானிக்கப்படுகின்து. இதனாலேயே டார்வின் “Survival of the fittest” “தக்கன தழைக்கும்” என்கின்றார்.

z-oneஉழைப்பு சிரமத்தை, உள்ளடக்கியது. ஆனால் உழைப்பு பழக்கத்துக்கு கொண்டு வரும் போது அனுபவமாகி, கற்றலாகி, வினைத்திறன் விவேகத்தை உருவாக்குகின்றது. இதனால் உழைப்பு இலகுவாகின்றது. வெற்றியை, நிறைவைக் கொடுக்கின்றது. மனித சமுதாயத்தின் இன்றைய வெற்றிக்கு சூழலை ஆதிக்கப்படுத்தியதற்கு உழைப்பே காரணமாயிற்று. உண்மையில் மனித வரலாறு என்பது உழைப்பின் வரலாறாகவே காணப்படுகின்றது. ஆதி மனிதன் தனியனாக இயற்கையின் அச்சுறுத்தல்களை உழைப்பின் துணைகொண்டே வெற்றி கொண்டான். உழைப்பின் அனுபவமே அவனைக் கூட்டமாக சேர்ந்து வாழ வழிவகுத்தது. குடும்பங்களின் தோற்றமும், நதிக்கரையோர சமூக வாழ்வும் உழைப்பின் பலாபலன் ஆகும். கால ஓட்டத்தில் சமூகத் தலைவர்கள் தோற்றம் பெற்று தமக்காக உழைக்க ஒரு மக்கள் கூட்டத்தை நிர்பந்தித்தனர். காலப்போக்கில் உழைப்பு அடிமைச் சமுதாயத்திற்கு உரித்தாயிற்று. தொழிநுட்ப வளர்ச்சி முதலாளித்துவ சமுதாயத்துக்கு வழிவகுக்க உழைப்பு தொழிலாளர் சார்ந்ததாக எடுக்கப்பட்டுள்ளது.

உலக வரலாற்றில்  உழைப்பு சார்ந்த பரிமானம் கொம்யூனிச சித்தாந்தத்தை தோற்றுவித்தது. போட்டியாக முதலாளித்துவம், சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தொழிலாளர் நலன், உரிமைகள் என்ற கருத்தில் வளர்ச்சியடைந்தது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் உலக மயமாக்கலுக்கு ஏற்ப உழைப்பு கௌரவமான நிலையை அடைந்துள்ளது. மாற்றத்தின் தோற்றுவாயாக கொள்ளப்படுகின்றது. இந்நோக்கில் பாரம்பரிய யாழ்ப்பாண கலாசாரம் உழைப்பை ஒரு புருஷ இலட்சணமாக போற்றியது. ஆனால் இன்றைய யாழ்ப்பாண சமூத்தில் உழைப்பு பற்றிய கருத்தியல் நிலைப்பாடு அரசியல், சமூக, பொருளாதார, தொழிநுட்ப செல்வாக்கிற்கு உட்படுத்தப்பட்டு ஒரு மாறுபட்ட போக்கை கொண்டிருப்பது சார்ந்த விமர்சனத்தின் ஒரு பகிர்வாகவே இக் கட்டுரை அமைகின்றது.

z-twoஉழைப்பு யாழ்ப்பாண பாரம்பரிய பார்வையில்

யாழ்ப்பாணம் கொண்டிருக்கும் பௌதீக காலநிலை 28 – 30 பாகை செல்சியஸ் சராசரி வெப்பத்தையும் 1200 மில்லிமீற்றர் சராசரி மழை வீழ்ச்சியையும், கடற்கரையோரங்கள், களப்புக்கள், வறள் வலையங்கள் ஆகியவற்றுடன் வலிகாமம் வடக்கில் வளம் மிக்க செம்மணல் தரையையும் கொண்டிருக்கின்றது. தேவைக்கான தண்ணீருக்காக தரைக்கீழ் நீர்ப்படுக்கைகளையே பயன்படுத்துகின்றனர். இதனால் பாரம்பரிய விவசாயம் உழைப்பில் தங்கியதாக காணப்பட்டது. மக்களும்  கடுமையான உழைப்பிற்கு பழக்கப்பட்டிருந்தனர். உழைப்பின் பெறுமதியை உணர்ந்திருந்தனர். இதனால் சேமிக்கும் பழக்கத்திற்கு உதாரணமாக கூறப்பட்டனர். இவர்கள்தம் செலவுப் பழக்கம் கூட இவர்களுக்கே உரித்தான பண்புகளை கொண்டிருந்தது. இதனால் சமூக அலகுகளான குடும்பங்கள் பாரம்பரிய பெருமைகளுடன் வாழ்ந்து வந்தன.

ஒரு தேசிய இனம் என அடையாளப்படுத்துவதற்கு அடிப்படையாக அமையக்கூடிய பூரணமான நிலப் பயன்பாடு, தேர்ச்சித்திறன் மிக்க உண்மையான, கடுமையான நேர்மையான உழைப்பு, முயற்சிகளை துணிவுடன் முன்னெடுக்கக்கூடிய முயற்சியாண்மைத் திறன், தேவையான முதலீட்டை திரட்டக்கூடிய கடன் இறுக்கும் தன்மை, முன்கூட்டியே விiவுகளை எதிர்வுகூறக்கூடிய அறிவுப்புலம், உற்பத்தியில் மகிழ்வு காணும் தொழில் திருப்தி, இயற்கையுடன் இணைந்த வாழ்வுமுறை என்பன சர்வதேச அரங்கில் தமிழர் தம் தேசியத்துக்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது. உண்மையில் இவை அனைத்தும் உழைப்பு என்ற பரிமாண நிலையில் தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையிலேயே சாத்தியமாயிற்று.

உழைப்பு – கருத்துநிலைச் சிதைவு

கடந்த முப்பது ஆண்டு கால இனப்போராட்டம் ஏற்படுத்திய எல்லா வகையான அழிவுகளிலும் முதன்மையாக கொள்ளக்கூடியது மக்கள் உழைப்பு என்ற கருத்துநிலை ஏற்படுத்தியுள்ள மாற்றமே ஆகும். இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்ற விபரணை பொருத்தமானதல்ல. யாரால் திட்டமிட்டு புகுத்தியது என்று கூறக்கூடியதுமல்ல. ஆனால் போராட்ட அவலங்கள் அழிவுகளை எதிர்கொள்ள கையாண்ட தந்திரோபாயங்களின் செல்வாக்கு இத்திரிபுநிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.

z-threeஉழைப்பு – யாழ்ப்பாணத்தின் இன்றைய பார்வையில்

யாழ்ப்பாண மக்களின் உழைப்புப்; பற்றிய பலவகையான விமர்சனங்கள் நாளாந்தம் தெரிவிக்கப்படுகின்றன. நேர்மையான நம்பிக்கைக்குரிய சன்மானத்துக்கு ஏற்றதான உழைப்பை பெற்றுக்கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் தெரிவிக்கப்படுகின்றது. உழைப்பினர்  கூலி அல்லது சன்மானத்தில் மட்டுமே குறியாக இருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டப் படுகின்றது. இத்தகைய அவலம் உழைப்பின் எல்லா மட்டங்களிலும் காணப்படுகிறது. காலத்துக்கு காலம் இந்நிலமையை மாற்றுவதற்கான முன்னெடுப்புக்கள் எல்லா மட்டங்களிலும் சிபாரிசு செய்யப்பட்டாலும் இடர்களும் முரண்பாடுகளும் காணப்படுவதாக அனைவருமே சலித்துக் கொள்கின்றனர். இந்தப் பின்ணனியில் அரசியல் நடத்துபவர்கள் தேசியம் என்ற பரிமாணம் தன் அடிப்படையான வலு ஒன்றை இழந்து கொண்டிருக்கின்றது என்ற உண்மையை ஏன் சுட்டிக் காட்டுவதில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தவே செய்கின்றது.

யாழ்ப்பாணத் தமிழர்கள் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும் என்ற அபிலாசை பிரித்தானிய காலத்திலிருந்தே தமிழர் மத்தியில் விதைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இலங்கையின் பிரித்தானிய அரச அதிகாரம் நிர்வாகிகள் கையில் விடப்பட்டிருந்ததனால் அவ் எதிர்பார்க்கை பொருத்தமானதாகவும் காணப்பட்டது. ஆனால் இலங்கை சுதந்திரமடைந்ததின் பின் அரச உத்தியோகத்தில் குடிப்பரம்பல் வீதாசாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையிலும், அரச அதிகாரம் அரச நிர்வாகிகள் கையில் இருந்து எடுக்கப்பட்ட நிலையிலும், அரச உத்தியோகத்தை நோக்கிய எமது அபிலாசையை தொடர்வது பாரிய பின்னடைவை ஏற்படுத்தலாம் தவிர அரச உத்தியோகத்தை பெற்று கொள்வதில் நமக்குள் நாம் கையாண்ட நுட்பங்கள்,  இதனை வசப்படுத்திய அரசியல் தலைமைகள் நுண்பாக அரசியல் இலாபத்திற்காக கையாண்ட அனுகுமுறைகள் எம்மை அறியாமலேயே உழைப்பு என்ற பரிமாணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டன.

z-2இந்த நெருக்கீடான பின்ணனியில் கல்வித்தரம் தொழில் தேர்ச்சித்திறன் பாரிய வீழ்ச்சியைக் கண்டது. தொடர்ச்சியான இடப்பெயர்வு, முயற்சிகளை முன்னெடுக்கமுடியாத நிச்சயமற்ற தன்மைகள், விரக்தி என்பன உழைப்பு தேடுவதை அர்த்தம்றதாக்கிற்று. இந்த இடைவெளியில் வெளிநாடுகளில் இடம்பெயர்ந்தவர்கள் அனுப்பிய பணம் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய உதவித் திட்டங்கள் உழைக்க வேண்டிய தேவையை பின்தள்ளிற்று. இவ்வாறான கருத்துநிலைச் சிதைவுகளால் உந்தப்பட்டவர்கள் உழைப்பு வருமானம் பெறுவதற்கு மட்டும் என்ற கருத்துதிரிபு நிலையை ஏற்றுக்கொண்டனர். இதனால் யாழ்ப்பாணப் பாரம்பரியம் கட்டிக் காத்த நேர்மையான கடுமையான உழைப்பாளிகள் என்ற பதிவுகளுக்கு மாறாக யாழ்ப்பாண உழைப்பினர் கல்வித் திறனை பத்திரங்களில் மட்டும் கொண்டிருப்பவர் தொழில் தேர்ச்சித் திறன் இல்லாதவர், ஆங்கில மொழியில் பரீட்சியம் இல்லாதவர், வேலையின்; மெருகூட்டலில் அக்கறை கொள்ளாதவர், கூலியை மட்டும் கருத்தில் கொள்பவர் மேலாக உழைப்பு வருமானம் இல்லாமலேயே தங்கி வாழ்வதற்கு பழக்கப்பட்டவர் என வர்ணிக்கப்பட்டனர்;. இந்த அவலங்களுக்கு மேலாக கை, கால், அவயங்களை அசைத்து வேலை செய்யாது இருப்பதால் பலர் உடல் ஊனமுற்றவர்களாக அல்லது உடல் ஊனமுற்றவர்களாக காட்டுவதில் வெட்கப்படாதவராக, நோய்வாய்ப்பட்டவராக இளமையில் முதுமை அடைந்தவராக காணப்படுகின்னர். இங்கு சமூகத்தை முன்னடத்த வேண்டிய அரசியல் தலைமைகள் இவற்றை ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்பது குறித்துக்காட்ட வேண்டியதே தவிர இலகுவாக வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக சுயத்தை இழந்து தூண்டுதலுக்கு உட்பட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தவிரவும் இளையோர் அரச உத்தியோகம் என்ற மயக்கத்தில்; தொழில் திருப்தியை புறந்தள்ளிய வாழ்வு தனி மனித சுயத்தில் இழிவு நிலையை ஏற்படுத்திவிடலாம் என்பதும் இது தமிழர் தம் தேசியத்துக்கான சுயத்திலும் பாதிப்பை ஏற்படுத்திவிடலாம் என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

z-fourஉழைப்பும் தொழில் திருப்தியும் (Job Satisfaction)

உண்மையில் உழைப்பு தொழில் திருப்தியை நோக்கியதாக அமைந்திருந்தது. ஆனால் இன்றைய உழைப்பில் தொழில் திருப்தி உழைப்பிலிருந்து விலத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டவனுக்கும், அவன் கொண்டிருக்கும் கல்வித்தரம் தேர்ச்சித்திறனுக்கும் உள்ள தொடர்பு பின்தள்ளப்பட்டுள்ளது. வேலை விபரணம் (Job Description) தெரியாமலேயே பலர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அரச பொது ஊழியர் என்ற நிலைப்பாட்டில் மக்கள் சேவை என்ற கருத்துநிலை புறந்தள்ளப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர் தமது உத்தியோகத்தில், சம்பளத்தில் எவரும் கை வைக்க முடியாது என்ற துணிவு மேலோங்கி இருப்பதால் இங்கு தொழில் திருப்தியும் மக்கள் சேவையும்  காலாவதியாகிற்று.

யாழ்ப்பாண பாடசாலைக் சமூகத்தில் 133 ஆசிரியர்கள் உளக்குறைபாடு உடையவர்களாக அடையாளங் காணப்பட்டது பற்றிய ஒரு விமர்சனம் அண்மைக்கால யாழ் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் அளவிற்கு ஆசிரியர் தொழில் திருப்தி கேள்விக்குறியாகியுள்ளது தவிர இடைநிலைக் கல்வியை பாடசாலையை விடுத்து தனியார் கல்வி நிலையங்களில் எதிர்பார்க்கும் அளவிற்கு தொழில் திருப்தி காணமல்போய்விட்டது.

பல அரச அலுவலகங்களில் உழைப்பினர் மேற்பார்வை மட்டத்திலேயே அமர்த்தப்படுகின்றனர். இவர்களது உழைப்பு தொழில் விபரணையின்படி வேலைகளை மதிப்பிடுதல் ஆகும். ஆனால் அவர்களுக்கு வேலையை மதிப்பீடு செய்யும் திறன் பரீட்சயம் இல்லை. இதனால் கீழ் அமைந்தோரை சமாளிப்பது, ஒத்துப்போவது, சாந்தப்படுத்துவதே தொழில் திருப்தியாக திரிபுபட்டுவிட்டது. நிலமையில் சிக்கல் ஏற்படுமிடத்து தமது அரசியல் அனுசரணைகளை வெளிப்படுத்தி தமது இருப்பை பலப்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலமையால் தொழில் திருப்தி அடிபட்டு போய்விடுகின்றது.
தொழில் திருப்தி ஒருவரின் உழைப்பிற்கான உந்துதல், உழைப்பிற்கான உண்மையான பலாபலன். அவனது வாழ்வின் அர்த்தத்தை உணர்த்துவது. ஆனால் தொழில் திருப்தியை அனுபவித்தால் தான் அதன் மகத்துவம் புரியும். தொழில் திருப்தியை உழைப்பினர் உணர்வில் ஏற்காத நிலையில் தொழில் திருப்தி அர்த்தமற்றதாகவே காணப்படும். இன்றைய யாழ்ப்பாண உழைப்பினர் எத்தனை சதவீதம் தொழில் திருப்தியை அனுபவிக்கின்றனர் என்பதை கணிப்பிட்டால் 10 சதவீதம் தேறுமா என்பது சந்தேகமே.

தொழில் திருப்தி நோக்கிய உழைப்பு நேர்மையானதாக, உண்மையானதாக, பூரணத்துவம்மிக்கதாக, மெருகூட்டப்பட்ட அடைவுகளை வெளியிடுவதாக அமையும். எத்தகைய விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டிருக்கும் தனிநபர் நோக்கில் குடும்பத்தில், சமூகத்தில் அடுத்தவரில் கரிசனைகொண்டிருப்பதற்கு ஆதாரமாக அத்திவாரமாக அமையும். தொழில் திருப்தி இல்லாத உழைப்பு அதன் வழியில் பெற்ற சன்மானம், சம்பளம் திருட்டாகவே கொள்ளப்படும். மேலாக மற்றவரை அல்லது தொழில் தருநரை அண்டி வாழும் கீழ் நிலையை தோற்றிவிடும். குறிப்பாக ஒரு இனத்தின் தேசியம் என்ற வரையறைகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகிவிடும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே உழைப்பு என்ற கருதுகோளை முன்னைய பாரம்பரிய நிலைக்கு உயர்த்த சேர்ந்து உழைப்போம்.