செய்திகள்

ஊழலை விசாரிக்க வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களுக்கு எதிராக சுயாதீன ஆணைக்குழுவினை அமைக்குமாறு கோரி கண்டனப்பேரணியொன்று மட்டக்களப்பில் நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் உள்ள பொதுமக்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் நலன் விரும்பிகள் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடுசெய்திருந்தனர்.

கிழக்கு பல்கலைகழகம் தொடர்பில் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன ஆணைக்குழுவினை நியமித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என இங்கு ஆhப்பாட்டக்காரர்களினால் வலியுறுத்தப்பட்டது.

கடந்த காலத்தில் இது தொடர்பில் பல்வேறு தடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் அவை கருத்தில் கொள்ளப்படவில்லையெனவும் புதிய அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இங்கு வலிறுத்தப்பட்டது.

மட்டக்களப்பு நகரில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட முன்றிலில் ஆரம்பமான இந்த கண்டனப்பேரணியானது மட்டக்களப்பு காந்திபூங்கா வரை சென்று அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு கண்டன பேரணியில் கலந்துகொண்டனர்.

அரசே காமுகர்களிடம் இருந்து பெண்களை காப்பாற்று,சக ஊழியர்களுடனும் மாணவர்களுடனும் கண்ணியமாக நடக்கத்தெரியாத காட்டுமிராண்டிகளை வீட்டுக்கு அனுப்பு,அரச பொதுச்சொத்துகளை துஸ்பிரயோகம் செய்தவர்களை சிறைக்கு அனுப்பு போன்ற வாசகங்களை ஏந்தியிருந்தனர்.

இதேவேளை இந்த கண்டனப்பேரணி தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கோவிந்தன் கிட்ணராஜாவிடம் வினவியபோது,

“எனக்கு எதிரான இந்த கண்டனப்பேரணி சிலர் தனிப்பட்ட இலாபங்களுக்காகவே நடத்தினர். பல்கலைக்கழகத்தில் எமக்கு எதிராக போராடமுடியாதவர்கள் இவ்வாறு வீதியால் செல்பவர்களை வைத்து போராடுகின்றனர்.

இந்த கண்டன பேரணிக்கு பல்கலைக்கழக மாணவர்களை அழைத்தபோது அவர்கள் வராத நிலையில் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் இருந்து மாணவர்களை அழைத்துவந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச்செய்துள்ளனர்.

அத்துடன் ஆட்சிமாற்றத்தினை பயன்படுத்தி எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போலி குற்றச்சாட்டுகளை மீண்டும் கொண்டுவர முயல்கின்றனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்துக்குள் ஊழல் இடம்பெற்றுள்ளதாக கண்டறிவதற்கு அமைக்கப்படும் எந்த ஆணைக்குழுவினையும் முழு மனதுடன் வரவேற்க நான் தயாராகவே உள்ளேன் ” என்றார்.

Eastern Uni Proetst  (1) Eastern Uni Proetst  (2) Eastern Uni Proetst  (4) Eastern Uni Proetst  (6) Eastern Uni Proetst  (7) Eastern Uni Proetst  (8) Eastern Uni Proetst  (9) Eastern Uni Proetst  (10) Eastern Uni Proetst  (11) Eastern Uni Proetst  (12)