செய்திகள்

எகிப்து முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது

எகிப்து கலவரத்தின்போது, சிறைச்சாலையிலிருந்து கைதிகளை தப்பவைத்த குற்றத்துக்காக முன்னாள் ஜனாதிபதி மொர்சிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை கெய்ரோ நீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது.

வெளிநாட்டினருடன் சேர்ந்து, நாட்டுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், மொர்சிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

அவருடன் அவரது இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியின் ஆலோசகர் முகமது பேடி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோருக்கு கடந்த மே மாதம் 16-ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எஹிப்து நாட்டு மரபுப்படி, தண்டனை முடிவுகள் மத குருவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், மத தலைமையும் மொர்சியின் தண்டனையை உறுதி செய்வதாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து மொர்சியின் மரண தண்டனையை கெய்ரோ நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சதித் திட்ட வழக்கு தவிர , மேலும் பல வழக்குகளும் மொர்சி மீது உள்ளன.

எகிப்தில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு தெரிவுசெய்யப்பட்ட முதல் ஜனாதிபதி முகமது மொர்சி. மொர்சியின் கொள்கைகளுக்கு எதிராக கிளர்ச்சிப் படை ஒன்று உருவாகி, அவருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் வெடித்தன. இதில் பலர் பலியாகினர். கலவரங்கள் தொடர்ந்து உள்நாட்டு நெருக்கடி அதிகரித்ததை அடுத்து சர்வதேச அழுத்தங்களால் மொர்சியை கடந்த 2013-ம் ஆண்டு ராணுவம் பலவந்தமாக பதவியிலிருந்து வெளியேற்றியது.

எகிப்து அரசியல் வரலாற்றில் அதிபர் பதவி வகித்த ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.